நாகையை கலக்கும் பிரதாபராமபுரம் ஊராட்சி , ஆன்லைன் கோரிக்கை மனுவுக்கு உடனடி தீர்வு.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சி, கடலோரக் கிராமங்களில் ஒன்றானதாகும். இந்த ஊராட்சி சிறந்த முன்மாதிரியான ஊராட்சி என்று மத்திய , மாநில அரசால் நற்சான்று பெற்றதாகும். ஆழிப்பேரலை என்னும் சுனாமி, கஜாபுயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் இப்பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த பிரதாமராமபுரம் ஊராட்சியில், பட்டப்படிப்பு முடித்து இளம் வயதிலேயே RVS.சிவராசு ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற நாளிலிருந்து , தன்னலம் கருதாமல் பல்வேறு நலப்பணிகளை செய்துவருவதாக ஊர் மக்களால் புகழப்படுகிறார்.
ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வாய்க்கால் தூர் வாருதல், இயற்கை பேரிடர்களிலிருந்து இருந்து பாதுகாத்துக் கொள்ள பனை விதைகள் நடுதல், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் அமைத்தல், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துதல், விவசாய சங்கங்கள் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் போன்ற பல காரியங்களை செய்து வருகிறார். மேலும் பிரதாபராமபுரம் ஊராட்சியின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உலகவங்கியின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான முயற்சிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதுபோல ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் பெட்டி ஒன்று வைத்து அதில் வரும் புகார்களுக்கு நடவடிக்கை எடுத்து வந்தார். இந்நிலையில் தற்போது உள்ள நவீன வசதிகளை நினைவில் கொண்டு,
பிரதாபராமபுரம்ஊராட்சியில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை ஊராட்சி மன்றத்திற்கு கோரிக்கை மனுவாக அளிக்கும் வசதியும் அந்த மனுவிற்கு ஒப்புகை சீட்டும் வழங்கப்படுகிறது. ஊராட்சி மன்றத்திற்கு நேரில் வர இயலாதவர்கள் ஆன்லைனிலும் தங்களின் கோரிக்கை மனுக்களை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வசதியை பயன்படுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனுவாகவோ அல்லது ஆன்லைன் வாயிலாக உங்களின் கோரிக்கைகளை மற்றும் தேவைகளை தெரிவிக்கலாம் என்றும்,
ஆன்லைன் கோரிக்கை மனு அளிக்க
bit.ly/PRPuram என்ற லிங்கை கிளிக் செய்து மனு அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள குறைகளை மனுக்கள் மூலம் பெற்றுக் கொண்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு செய்து வருகிறார்.
இந்த ஊராட்சிக்கும் ஊராட்சி மன்ற தலைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நாகை செய்தியாளர்: ச.ராஜேஷ்