“பஸ்சில் உரசுவார்களே, அது போல நினைத்து கொள்” கோவையில் அரங்கேறிய அநீதி
கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மகுடேஸ்வரன். இவரது 17 வயது மகள் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் 11-ஆம் வகுப்பு வரை அதே பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சின்மயா வித்யாலயாவில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி, மாற்றுச் சான்றிதழ் வாங்கி தற்பொழுது பயின்று வரும் பள்ளிக்கு மாறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மகுடேஸ்வரனும் அவரது மனைவியும் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது மாணவியின் அறை உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. நீண்ட நேரமாக தட்டியும் மாணவி கதவை திறக்கதாதால், சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து அறைக்குள் சென்றனர்.
அங்கே மாணவி மின் விசிறியில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதனிடையே தற்கொலை செய்த மாணவியின் கையில் “அந்த 3 பேரையும் சும்மா விட கூடாது” என்று ஒரு கடிதம் இருந்ததாகவும் அதில் மூன்று நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. மாணவி கடிதத்தை கைபற்றிய காவல் துறையினர் இவ்வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவி தற்கொலைக்கு சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் தான் காரணம் எனவும், அவர் அளித்த பாலியல் தொல்லையால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் மாணவியின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாணவியின் உறவினர்கள் கூறுகையில், ”மாணவி நன்றாக படிக்கக் கூடியவர். பள்ளியில் தொடர்ந்து நன்றாக படித்து வந்துள்ளார். சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மாணவியின் தொலைபேசி எண்ணை வாங்கி அடிக்கடி மாணவியிடம் பேசி வந்துள்ளார். ஆசிரியர் என்ற முறையில் மாணவியும் பேசி வந்திருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் பள்ளியின் அவைக்களத்திற்கு மாணவியை அழைத்த மிதுன், மாணவியின் மேலாடையை கழற்றி வரம்பு மீறியுள்ளார். இது குறித்து மாணவி பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் அளித்தபோது, பஸ்சில் செல்லும் போது இடிப்பார்களே, அதுபோல நினைத்துக் கொள் என கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என மறைத்து விட்டனர். அப்பள்ளி தலைமையாசிரியர் பெற்றோரிடமும் சொல்ல வேண்டாம் என கூறியிருகின்றனர். மேலும் பள்ளி நிர்வாகம் இந்த சம்பவத்தை மறைக்க மாணவிக்கு தனியாக உளவியல் ஆலோசணையும் வழங்கியுள்ளது. கடந்த 6 மாதங்களாக மன உளைச்சல் உடன் மாணவி இருந்துள்ளார்”
இதனிடையே கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விரைவில் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்படலாம் என தகவல்கள் கிடைத்துள்ளது.
மாணவியின் தற்கொலை கடிதத்தில் “யாரையும் சும்மா விடக்கூடாது. ரிதாவின் தாத்தா, எலிசா சாரின் அப்பா, இந்த சார்” என 3 நபர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். எதன் அடிப்படையில் மாணவி மேலும் இரண்டு நபர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார் என்பது குறித்தும் காவல் துறையினர் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.