தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு வட மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை முடிவிற்கு வந்தாலும் கூட தென்மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும் மழை பெய்து ஓய்ந்துள்ள பெரும்பாலான பகுதிகளின் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரும், சாக்கடை கழிவுநீரும் இன்னும் முற்றிலுமாக வடியாத சூழலில் திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட இருக்கிறது.
மேலும் கனமழை ஓய்ந்திருந்தாலும் கூட தாழ்வான பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி வளாகங்களிலும், அதன் சுற்றுவட்டார பகுதி சாலைகளிலும் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தாலும் தேங்கி அசுத்தமாகியுள்ள மழைநீரால் மாணவச் செல்வங்களுக்கு நோய் தொற்று ஏற்படும் சூழல் நிலவுவதோடு தரமான குடிநீர், பாதுகாப்பான மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவச் செல்வங்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதோடு, அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும்.
எனவே திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகள் திறப்பதை மறுபரிசீலனை செய்து, தொடர் கனமழைக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளை அவசர, அவசரமாக திறப்பதற்கு முன் மாணவர்களின் பாதுகாப்பையும், உடல்நலத்தையும் கவனத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் மின்சார இணைப்புகளையும், குடிதண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் முறையாக ஆய்வு செய்து அனைத்தும் சரியாக இருக்கிறது என்பதை உறுதி செய்த பின்னரே பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நல சங்க நிறுவனர் பொன்னுசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்