“சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட செய்தே ஆக வேண்டிய கட்டாயம்” நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அறிக்கை
கோவையில், பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, மாணவி புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: “இதற்கு முன்பு சென்னையில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. மற்றுமொரு தனியார் பள்ளியில், சின்னஞ்சிறு மழலைகளை ஒரு ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ வெளியானது.
தற்போது, கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் அந்த மாணவி தாள முடியாத மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை. என்ன நடக்கிறது தமிழக பள்ளிகளில்..? குழந்தைகள் படிப்பதா வேண்டாமா..? சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட செய்தே ஆக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட கயவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது.
அந்த வக்கிரபுத்தி கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆக வேண்டும். அதுவும் விரைவாக. இதுவே என் வேண்டுகோள்” இவ்வாறு எம்.எஸ்.பாஸ்கர் கூறியுள்ளார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #கோவை #கோவை_மாணவி_தற்கொலை #எம்.எஸ்.பாஸ்கர் #தமிழகஅரசு #தமிழகபள்ளிகள் #M.S.Baskar #KovaiGirlSuicide