வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தம் : கூடுதல் 2 நாட்கள் சிறப்பு முகாம்!
வாக்காளர் பட்டியல் மாற்றங்களுக்காக கூடுதலாக சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிசெய்வதற்காக வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படுகிறது. தற்போது நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் அதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அந்த வகையில், நடப்பாண்டுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் மாற்றங்களுக்காக கூடுதலாக சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 01.11.2021 முதல் 05.01.2022 வரை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக 13.11.2021, 14.11.2021, 27.11.2021 மற்றும் 28.11.2021 (சனிக்கிழமை மற்றும் ஞயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
எனினும், கனமழை காரணமாக சில மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் தொடர்பான நடிவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தகுதிவாய்ந்த வாக்காளர்கள் தங்களது பெயரைச் சேர்ப்பதற்கும் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக 20.11.2021 (சனிக்கிழமை) மற்றும் 21.11.2021 (ஞயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் கூடுதலாக சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.