பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா
தேவா, ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மட்டுமின்றி சிறந்த பாடகரும் ஆவார். தமிழ் திரையுலகில் தேவாவின் இசைக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சுமார் 20 ஆண்டுகாலம் தமிழ்த் திரைப்படங்களுக்காக பல பாடல்களை இயற்றியுள்ளார் மற்றும் பின்னணி இசையும் அமைத்துள்ளார். தேவா கானா பாடல்களில் கை தேர்ந்தவராக நம்முடைய தமிழ் சினிமாவில் புகழப்பட்டார். பெரும்பாலும் அவருடைய கானா பாட்டுகள் சென்னை தமிழிலேயே இருக்கும், பாட்டுகளின் பொருள் குறைவாக இருந்தாலும் தேவாவின் இசைக்காகவே அவருடைய பாடல்கள் மக்களால் விரும்பப்படுகின்றன. தமிழ் திரையுலகில் கானா வகையின் தந்தை என்று சிறப்புடன் அழைக்கப்படுபவர், தேவா.
மிகக் குறுகிய காலத்திற்குள் பல படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெருமை இசையமைப்பாளரான தேவாவையே சாரும். 1989 ஆம் ஆண்டு “மனசுக்கேத்த மகராசா” என்ற படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். இடைப்பட்ட ஆண்டுகளில் மொத்தம் 400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவாவும் இசையமைப்பாளராக களமிறங்கியுள்ளார்.
திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே, தேவா தொலைக்காட்சி துறையில் சில காலம் பணியாற்றினார். அந்த நாட்களில், தேவாவின் சகோதரர்கள் இளையராஜாவின் இசைக்குழுவிலும், மற்ற இசை அமைப்பாளர்களிடமும் வாத்தியக் கலைஞர்களாகவும் பணியாற்றினர். ஆனால் தேவா தனது தொழிலில் சுய முன்னேற்றத்திற்காக சிறப்பு ஆர்வம் காட்டினார், அதே நேரத்தில், அவர் திரைப்படங்களில் நுழைவதற்கான வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தார். ஆனால் அந்த முயற்சிகளின் பலன்கள் அவ்வளவு எளிதில் பலனைத் தரவில்லை. மிகுந்த சிரமத்திற்குப் பிறகு, சில நண்பர்கள் மற்றும் அவரது நான்கு சகோதரர்களின் உதவியுடன் அவர் களத்தில் இறங்கினார். அவர் நுழைந்த பிறகு, அந்த படங்களின் தயாரிப்பு வேலைகள், அதற்கு இசையமைப்பாளராக தேவாவை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள், முடிவாகவில்லை.
இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரது இசை பயணத்தினால் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்த சமயத்திலும் இசையமைப்பாளர் தேவா தனது இசைக்கு என்றே ஒரு நீங்காத இடத்தை ரசிகர்களின் மனதில் தக்க வைத்துள்ளார்.
1996ல் தேவா சுமார் 36 படங்களுக்கு இசையமைத்தார். காதல் கோட்டை, ஆசை, நேருக்கு நேர், வாலி, பிரியமுதன், நினைத்தேன் வந்தாய், குஷி போன்ற படங்களில், நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் உருவாவதில் தேவாவின் இசை பெரும் பங்கு வகித்தன.
தேவாவின் இசை நட்பு, காதல், பக்தி என அனைத்து விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறது. நட்புக்காக திரைப்படத்தின் ‘மீசக்கார நண்பா’ பாடலை கேட்டாலே நமக்கு இப்படி ஒரு நண்பன் இல்லையே என்று ஏங்கும் அளவிற்கு இந்த பாடல் அமைந்திருக்கும். பாண்டி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆத்தா நீ இல்லேன்னா’ பாடல் அம்மா சென்டிமென்டில் கண்களில் கண்ணீரை ததும்பச் செய்கிறது. ஆனந்த பூங்காற்றே திரைப்படத்தின் செம்மீனா பாடல், மெல்லிய நதியை கிழித்துக் கொண்டு போகும் மீனை போல ஹரிஹரன் செம்மீனா என்று தொடங்குவார். சுமார் 5.28 நிமிடங்கள் தேவா 100 வாத்தியங்கள் பயன்படுத்தி பிரமாண்டமாக ஆர்கெஸ்ட்ரா செய்தது போல அந்தப் பாடல் ஒரு உணர்வைத் தரும்.