மழை பாதிப்பு : தமிழகத்தை ஆய்வு செய்ய மத்திய குழு வருகை!! நிவாரண நிதி கிடைக்கப்பெறுமா?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை, கன்னியாகுமரி, வேலூர் மாவட்டங்களில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள் என பெரும்பாலான மாவட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்தது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கின.
சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன.இதனை சுட்டிக்காட்டி தமிழகத்திற்கு உடனடி நிவாரணமாக ரூ.550 கோடியும், முழுமையான நிவாரணமாக ரூ.2,079 கோடியும் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் கோரப்பட்டிருந்தது. இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய மந்திரி அமித்ஷாவும் தொலைபேசியில் பேசி வெள்ள நிலைமை பற்றி கேட்டறிந்தார்.
அதன்படி, தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவினர் இன்று மதியம் சென்னை வருகின்றனர்.
இன்று சென்னை வரும் இக்குழுவினர் முதலில் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்திக்கின்றனர். அதன்பின், இரண்டு குழுக்களாகப் பிரிந்து மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்துகின்றனர். அதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதனிடையே, மத்திய அரசிடம் ரூ.2,079 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என கோரப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பாக மத்திய அரசிடம் அளித்த தரவுக்கும் பிறகு தமிழகத்தில் மழை தொடர்ந்து அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டதால் கூடுதல் நிதி கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.