சினிமாசெய்திகள்
Trending

ஜெய்பீம் விவகாரம் : மன்னிப்பு கோரிய ஞானவேல் : முற்றுப்புள்ளி வைக்க சீமான் கோரிக்கை!!

ஜெய்பீம் விவகாரம் : மன்னிப்பு கோரிய ஞானவேல் : முற்றுப்புள்ளி வைக்க சீமான் கோரிக்கை!!

ஜோதிகா & சூர்யா தயாரிப்பில் ஜெய் பீம் படம் சமீபத்தில் வெளியானது. சமூகத்தில் அதிகாரவர்க்கத்தின் செயல்பாடுகள் மீது பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
ஜெய் பீம் ரசிகர்களிடையே பேராதரவை பெற்றிருக்கிறது. அதேசமயம் அக்னி கலச சீனுக்காக பாமக அதனை எதிர்த்துவருகிறது. சூர்யா எங்கும் நடமாட முடியாது என பாமக மாவட்ட செயலாளர் கூறியது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. சூர்யா வீட்டுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அன்புமணி சூர்யாவுக்கு எழுதிய கடிதத்துக்கு பாரதிராஜா பதில் அளித்திருந்தார். அதற்கு அன்புமணியும் காட்டமாக பதிலளித்திருந்தார். நிலைமை இப்படி இருக்க செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘நான் படத்தை பார்த்தபோது எனக்கு அதுபோன்று எதுவும் தெரியவில்லை.. ஆனால், மற்றவர்கள் இதுகுறித்து பேசியபோது எனக்கு தெரிந்தது… அக்னி கலசம் பாமகவின் குறியீடு என்பது உலகிற்கே தெரியும்.

அந்தோணிசாமி என்கிற பெயரை ஏன் மாற்ற வேண்டும்? அதேபோல வன்னியர் சங்கத்தின் அடையாளமாக இருக்கும் அந்த குறியீட்டை ஏன் காலண்டரில் பயன்படுத்த வேண்டும்…. அதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். நான் கவனித்திருந்தால் முன்பே அதனை நீக்க சொல்லியிருப்பேன்” என்றார்.

இச்சூழலில் ஜெய் பீம் பட இயக்குநர் ஞானவேல் நேற்று வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.

ஜெய் பீம்’ படத்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட இத்திரைப்படம், பொய் வழக்குகளால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் வலிகளைப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என விரும்பினேன். 1990-களில் ராஜாகண்ணு, விர்பலிங்கம் போன்ற பழங்குடிகள் மரணம், சிதம்பரம் பத்மினி, அத்தியூர் விஜயா போன்ற ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு நிகழ்ந்த துயரம் என பல்வேறு அதிகார அத்துமீறல்கள் நடந்தன. இன்றுவரையிலும் அம்மக்களுக்கு சமூக பாதுகாப்பின்மையோடு அது தொடரவே செய்கின்றன. எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கமும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து நீதிக்கான போராட்டத்தை நடத்தி வருகின்றன. நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய வழக்கில், காவல்துறையும் நீதித்துறையும் இணைந்து செயல்பட்டால், எளிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதை நம்பிக்கை வெளிச்சம் தருகிற வகையில் படமாக்கினோம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், ‘ஜெய் பீம்’ திரைப்படத்தைப் பார்த்துப் பாராட்டியதோடு பழங்குடி மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் இத்திரைப்படத்தின் நோக்கத்தை முழுமை பெற செய்தார். அதற்காக எனது மனப்பூர்வமான நன்றிகளை நமது முதல்வர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எல்லா தரப்பினரிடமிருந்தும் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது. அதேபோல, இத்திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறைக் கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை.

பின்னணியில் மாட்டப்படும் ஒரு காலண்டர் படம், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளபடும் என நான் அறியவில்லை. 1995 காலத்தைப் பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல.
சில வினாடிகள் மட்டுமே வருகிற அந்தக் காலண்டர் படம் படப்பிடிப்பின்போதும், ‘போஸ்ட் புரடெக்ஷன்’ பணியின்போதும் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை. அமேசான் ப்ரைமில் படம் வெளிவரும் முன்பே, பெரிய திரையில் பல்வேறு தரப்பினரும் திரைப்படத்தைப் பார்த்தனர். அப்போது கவனத்திற்கு வந்திருந்தாலும் கூட , படம் வெளிவரும் முன்பே அதை மாற்றி இருப்போம்.

நவம்பர் மாதம் 1-ம் தேதி இரவு அமேசானில் படம் வெளிவந்தும், காலண்டர் படம் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்தவுடன், உடனடியாக நவம்பர் 2-ம் தேதி காலையே அதை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. யாரும் கேட்பதற்கு முன்பே, அந்த காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு, எங்களுக்குத் தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என்று நம்பினேன். இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு திரு. சூர்யா அவர்களைப் பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது.

தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இத்திரைப்படத்தில் திரு. சூர்யா அவர்கள், பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தார். இயக்குநராக என்பொருட்டு அவருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலைவடிவமே திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஜெய் பீம்’ படம் குறித்தான தம்பி ஞானவேல் அவர்களின் கடிதம் கண்டேன். தாமதமாக வெளிவந்தாலும் மிகச்சரியாகத் தனது தரப்பு விளக்கத்தை அளித்து, இச்சிக்கலுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

சமூகப் பதற்றத்தையும், சச்சரவையும் தணிக்கும்விதமாக சமூகப்பொறுப்புணர்வோடும், மிகுந்த முதிர்ச்சியோடும் அணுகிய இம்முறை வரவேற்கத்தக்கது. ஆகவே, இச்சிக்கலை இத்தோடு கைவிட்டு, இனியும் இப்படத்தின் சிக்கலை ஒட்டுமொத்தச்சமூகத்தின் சிக்கலாக நீடிக்கச்செய்யாது, சமூக அவலங்களுக்காகக் குரலெழுப்பி, மக்களின் துயர்போக்கக் போராடவும், ஆக்கப்பூர்வப்பணிகளில் கவனம் செலுத்தவும் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button