தூத்துக்குடி ஆட்சியரகத்தில் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி – பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அய்யனார் காலனியைச் சேர்ந்தவர் பொன் முனியசாமி. வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி பொன் இசக்கி (30). தூத்துக்குடி விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்த தூத்துக்குடி 3வது மைல் பகுதியை சார்ந்த சுரேஷ் என்பருக்கும் பழக்கம் இருந்துள்ளது. பின்னர் அவர்களுக்குள் பிரச்சனை எற்பட்டுள்ளது. இந்நிலையில், சுரேஷ் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பொன் இசக்கி அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு போலீசார் சுரேஷை கைது செய்தனர்.
இந்நிலையில் ஜாமீனில் வந்த சுரேஷ் மீண்டும், பொன் இசக்கிக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதனால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொன் இசக்கி திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்திகள் : மாரிராஜ், தூத்துக்குடி