செய்திகள்

சென்னை போல் கோவையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் – முதல்வர் ஸ்டாலின்

சென்னை போல் கோவையின் வளர்ச்சிக்கு

முக்கியத்துவம் – முதல்வர் ஸ்டாலின்

கோவை வ.உ.சி மைதானத்தில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். ரூ. 89.73 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு, ரூ. 587 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 70 திட்டப் பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

சட்டமன்ற தேர்தலில் கோவையில் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெற முடியவில்லை. வெற்றியை தவறவிட்டாலும் கோவையில் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்லாது ஓட்டு போடாதவர்களுக்கும் பணியாற்றுவேன் என்று ஏற்கனேவே கூறினேன். அதனைத் தொடர்ந்து கடைபிடிப்பேன்.

அதன்படிதான் கோவைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்துள்ளேன். எந்தெந்த மாவட்டத்திற்கு அமைச்சர் பிரதிநிதி இல்லையோ அங்கெல்லாம் அமைச்சர்களை நியமித்துள்ளேன்.கோவைக்கு ஏராள திட்டங்களை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன். 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விமான நிலைய விரிவாகத்திற்கு ரூ. 1132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விரைவில் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் துவங்கும்.

கோவை மாநகராட்சியில் 2 நாட்களுக்கு ஒருமுறை சீரான குடி நீர் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோவையில் திமுக ஆட்சியில் திட்ட சாலைகள் அமைக்கப்பட்டன.அதன்படி 5 திட்ட சாலைகள் மேம்படுத்த ரூ.200 கோடி மதிப்பில் பணிகள் துவங்கும்.மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட வெள்ளகிணறு, சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டியில் பாதளசாக்கடை திட்டங்கள் ரூ. 309 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. கோவை நகரின் மையத்தில் உள்ள சிறைச்சாலை நகரின் வெளியே கொண்டு செல்லப்படும். காந்திபுரத்தில் கூட்ட அரங்கு உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் ரூ.200 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும்.

திடக்கழிவு மேலாண்மை மேம்படுத்த ரூ.11 கோடி செலவில் கூடுதல் பணிகள் தொடங்கும். மக்களுக்கு மருத்துவ வசதி அளிக்க 16 கோடியில் 63 நல்வாழ்வு மையங்களும், 3 மருத்துவ ஆய்வு கூடம் கட்டப்பட உள்ளது. சாலை விளக்கு இல்லாத இடத்தில் ரூ20 கோடியில் விளக்குகள் அமைக்கப்படும். இதற்கு விரைவில் அர்சாணை ஒதுக்கி நிதி ஒதுக்கி மக்களிடம் ஒப்படைக்க உள்ளோம்.

சென்னை போல் கோவையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. கோவை நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதன்படி அரசாணை வெளியிடப்பட்டது. திட்டங்களை செயல்படுத்த அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்தோம்.

கோவையை அனைத்து உட்கட்டமைப்பையும் கொண்ட மாவட்டமாக உருவாக்குவோம். தொழில் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து, லட்சக்கணக்கான தொழிலாளிகளுக்கு வாழ்வழிக்கும் மாவட்டம் இது தான். இது போல் தொழில் வளர்ச்சி அனைத்து மாவட்டத்திற்கும் வேண்டும் என்பது என் ஆசை.இந்தியாவில் தொழில் துறையில் சிறந்த மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும்.

இந்தியாவின் தொழில் முகவரியாக தமிழகம் மாற வேண்டும். கோவையில் நாளை தொழில் முனைவோர் மாநாடு நடக்க உள்ளது. இதில் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இதன்மூலம் இளைஞர்களுக்கு வேலை உருவகும். இந்தியாவின் முன்னணி தொழில் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். அதில் முதலிடம் கோவைக்கு தான்.செயல்தான் எனது பணி.

கோவை மாவட்டம் தமிழகத்தில் அனைத்து துறையிலும் தலைசிறந்த மாவட்டமாக இருக்கிறது. மாவட்டத்தை இன்னும் மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனப் பேசினார்.

செய்திகள் : கார்த்திக், கோவை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button