தந்தையை கட்டையால் அடித்து கொன்ற மகன்!!
பொறையாரில் குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையை கட்டையால் அடித்து கொன்ற மகனை கைது செய்து பொறையார் போலீசார் சிறையிலடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் மரகதம் காலனியைச் சேர்ந்தவர் அய்யாசாமி மகன் பாலு.65. விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு இந்திரா என்ற மனைவி மற்றம் 4 மகள்கள் 2மகன்கள் உள்ளனர். பாலு தினந்தோரும் மது அருந்திவிட்டு வந்து தெரு மக்களிடமும், குடும்பத்தினரிடம் தகராறு செய்வது வழக்கம். 4வது மகன் காளிமுத்து சென்னையிலுள்ள செருப்பு விற்பனை கடையில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 16ஆம் தேதி காளிமுத்து ஊருக்கு வந்துள்ளார். நேற்று பாலு குடித்துவிட்டு தகராறு செய்த நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பொறையாறு போலீசார் பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலுவின் குடும்பத்தினர் பாலு போதையில் கிரைன்டரின்மேல் விழுந்து தலையில் அடிபட்டுள்ளதாக கூறியுள்ளனர். கடந்த சில வருடங்களுக்குமுன் குடும்ப பிரச்சனை காரணமாக மகன் காளிமுத்து தந்தையின் காலை உடைத்தது தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து பாலுவின் மகன் காளிமுத்து மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பாலு தகராறில் ஈடுபட்டபோது ஆத்திரமடைந்த காளிமுத்து வீட்டில் இருந்த மூங்கில் கட்டையால் தந்தையை தலையில் அடித்ததும் தந்தை பாலு ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததும் தெரிய வந்தது. உடனடியாக போலீசார் கொலை வழக்காக மாற்றி பாலு மகன் காளிமுத்துவை(28) கைது செய்து சிறையிலடைத்தனர்.
செய்திகள் : ராஜேஷ், மயிலாடுதுறை