பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த சேமிப்பு கச்சா எண்ணெய்யை விடுவிக்கிறது மத்திய அரசு…..
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவலைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு, 16 டாலர்கள் என்ற அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
இதனைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் உற்பத்தியில், தினசரி ஒரு கோடி பேரல்களை பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் குறைத்தன. பின்னர் நிலைமை சீரடைந்து, விலை அதிகரித்தபோதிலும், 4 லட்சம் பேரல்கள் உற்பத்தியை மட்டுமே அதிகரித்துள்ளன.
இதனால் சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.இதனால், கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு, 80 டாலர்கள் என்ற அளவில் உள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்தியா கலால் வரியை பெட்ரோலுக்கு லிட்டருக்கு 5 ரூபாயையும், டீசலுக்கு 10 ரூபாயையும் மத்திய அரசு கடந்த 3-ம் தேதி குறைத்தது.
எனினும், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. எனவே, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்தன. இதனை பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் நிராகரித்துள்ளன.
இதனால் அமெரிக்கா கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசின் சேமிப்பில் உள்ள 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை விடுவிக்க முடிவுசெய்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேவையைவிட மிகவும் குறைவான அளவில் பெட்ரோலியத்தை செயற்கையான முறையில் பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் விநியோகிப்பதால், கடும் விளைவுகள் ஏற்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சேமிப்பில் உள்ள 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை விடுவிக்க முடிவுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுடன் ஆலோசனை நடத்தி, ஒரே நேரத்தில் கச்சா எண்ணெய் விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள மூன்று இடங்களில் 3 கோடியே 80 லட்சம் பேரல்களை இந்தியா சேமித்து வைத்துள்ளது.
இதில், 50 லட்சம் பேரல்களை விடுவிக்கும் பணி, அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனை, மத்திய அரசு மங்களூர் சுத்திகரிப்பு நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் ஆகியவற்றுக்கு விற்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.