மாநாடுக்கு கூட்டம் வருமா?
நீண்ட சர்ச்சைக்கு பிறகு வெளியாகுமா? ஆகாதா? என அனைத்தையும் தாண்டி, சிம்புவின் மாநாடு திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மாநாடு திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் மற்றும் எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன், வாகை சந்திரசேகர், கருணாகரன், ப்ரேம்ஜி அமரன், அஞ்சனா கீர்த்தி, மனோஜ் பாரதிராஜா, உதயா, அரவிந்த் ஆகாஷ் என பலரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
திரில்லர் மற்றும் அறிவியல் ரீதியாக டைம் லூப் என்ற கதைக்கருவை பயன்படுத்தி மாநாடு திரைப்படம் தயாராகியுள்ளது. பெரும்பாலும் ஹாலிவுட்டில் டைம் லூப் கதைக்கருவை பயன்படுத்தி பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்த கதைக்கரு குறைவான அளவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு அழகாக இந்த மாநாடு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
சிம்புவின் நண்பன் பிரேம்ஜி திருமணத்திற்காக துபாயிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைகிறார், சிம்பு. திருமணம் செய்யப்போகும் பெண்ணையும் அவளைக் காதலித்த தன் நண்பனையும் சேர்த்து வைப்பது தான் சிம்புவின் திட்டம். திட்டமிட்டபடி திருமணப் பெண்ணைக் கடத்தி பிரேம்ஜிக்கு திருமணம் செய்துவைக்கப் போகும்போது, ஒரு விபத்து நடந்துவிடுகிறது. அதில் ஏற்படும் பிரச்னையில் இருந்து விடுபட வேண்டுமானால் முதலமைச்சரைக் கொல்ல வேண்டுமெனக் கூறுகிறார், காவல்துறை அதிகாரியான எஸ்.ஜே.சூர்யா. முதலமைச்சரைக் கொன்று விடுகிறார் சிம்பு. பிறகு போலீசார் சிம்புவை கொன்று விடுகின்றனர். சட்டென விழித்துப் பார்த்தால், சிம்பு மீண்டும் விமானத்தில் இருக்கிறான்.
மனதில் ஏற்படும் புதிய பிம்பங்கள் நடக்கப்போகும் விஷயங்களை முன்கூட்டியே அறியும் அந்த ஆற்றல் அனைத்தையும் புரிந்து கொண்டு தன்னுடன் இருக்கும் பிரேம்ஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களிடம் இதை பகிர்ந்து கொள்கிறார். குறிப்பாக நவம்பர் 10 ஆம் தேதியில் நடக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய மாநாடு அதில் நடக்கும் அசம்பாவிதங்கள் முன்கூட்டியே ஒரு ட்ரெய்லர் போல கண் முன்னே வந்து கதாநாயகனுக்கு தெரிந்துவிடுகிறது . அந்த சம்பவங்களை எப்படி மாற்றி அமைப்பது எப்படி தடுப்பது சூழ்நிலையை புரிந்து ஒரு சராசரியான நிலைக்கு அனைவரையும் எப்படி கொண்டு வருவது என்பது தான் திரைப்படத்தின் மீதி கதை.
மாநாடு திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா தனது நடிப்பை சிம்புவிற்கு இணையாக கொடுத்துள்ளார். அனைவரும் குடும்பத்தோடு சென்று பார்க்கும் வகையில் இத்திரைப்படம் அமைந்துள்ளது.