“ஒன்னுமே இல்ல!!” குழந்தைகள் கொரோனா சிறப்பு வார்டில் திருட்டு!!
திண்டுக்கல் பழைய நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகளுக்காக கட்டப்பட்ட கொரோனா சிறப்பு வார்டில் திருட்டு.
கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என சுகாதார அமைப்புகள் தெரிவித்ததை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று இடங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது. அந்த வகையில் திண்டுக்கல் பழைய நீதிமன்ற வளாகத்தில் 75 ஆக்சிஜன் படுக்கைகளுடன் சிறப்பு சிகிச்சை மையம் கட்டப்பட்டது.
இந்த மையம் கொரோனா 3-வது கட்டத்தை எட்டாத நிலையில் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. சிறப்பு மையத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது இதனிடைய கொரோனா சிறப்பு மையத்தில் ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான ஆக்சிஜன் சிலிண்டர்களை இணைக்கும் 4 சிலிண்டர் இணைப்பு வால்வுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை நல பணிகள் இணை இயக்குனர் அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிறப்பு மையம் கட்டப்பட்டுள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் ஏற்கனவே உள்ள கட்டிடங்கள் பயன்பாடற்ற நிலையில் உள்ளதால் அந்தக் கட்டிடங்கள் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்பட்டு வருகிறது.
மதுஅருந்துதல், விபச்சாரம், கஞ்சா புகைக்கும் பள்ளி சிறுவர்கள் என பல்வேறு சமூக சீர்கேடுகள் நிறைந்த செயல்கள் நடக்கிறது எனவே போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்