ஓமிக்ரான் கொரோனா அச்சம் டாஸ்மாக் கடைக்கு செல்வோருக்கு வேக்சின் கட்டாயமாக்கப்படும் – மா.சு அறிவிப்பு*
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்களை கட்டுப்படுத்தும் விதமாக டாஸ்மாக் கடைகளுக்கு செல்லவும் இனி இரண்டு டோஸ் கொரோனா சான்றிதழ் தேவை என்ற விதி கொண்டு வரப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்களை கட்டுப்படுத்தும் விதமாக தியேட்டர் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்வோருக்கு வேக்சின் கட்டாயமாக்கப்பட்டு விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் வேக்சின் போட்டிருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் மக்களுக்கு வேக்சின் செலுத்தும் விதமாக வாரம் இரண்டு முறை வேக்சின் மெகா முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மழை காரணமாக இது வாரத்திற்கு ஒரு முகாமாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இன்று 12வது தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் ஏற்கனவே சென்னையில் 12 முகாம்கள் முடிந்துள்ள நிலையில் இன்று 13வது முகாம் நடத்தப்பட்டு வருகிறது.இதன் மூலம் இதுவரை தமிழ்நாட்டில் 6,92,72,814 டோஸ்கள் வேக்சின் போடப்பட்டுள்ளது. 4,49,96,514 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 2,42,76,300 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இன்று காலையில் இருந்து இதுவரை 9,33,738 டோஸ்கள் வேக்சின் போடப்பட்டுள்ளது.
இன்று மொத்தம் 1,600 முகாம்கள் தமிழ்நாடு முழுக்க நடத்தப்பட்டு வருகிறது.ஓமிக்ரான் கொரோனா பரவலுக்கு இடையே தமிழ்நாட்டில் கண்காணிப்பு நடவடிக்கைக்கு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்களை கட்டுப்படுத்தும் விதமாக டாஸ்மாக் கடைகளுக்கு செல்லவும் இனி இரண்டு டோஸ் கொரோனா சான்றிதழ் தேவை என்று விதி கொண்டு வரப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வேக்சின் முகாம்களை பார்வையிட்டவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அறிவிப்பு டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோர் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமாக்கப்படும். மாவட்ட ஆட்சியர்களுக்கு இது தொடர்பாக கட்டுப்பாட்டு விதிமுறைகள் அறிவிக்கப்படும். ஏற்கனவே தியேட்டர் போன்ற பொது இடங்களுக்கு இந்த விதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செய்திகள் : எம்.ஆர்.கிருஷ்ணபிரபு, மதுரை