செய்திகள்
Trending

எடப்பாடி பழனிசாமி நண்பரின் வங்கி லாக்கரில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்….

எடப்பாடி பழனிசாமி நண்பரின் வங்கி லாக்கரில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்….

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிக்கு நெருக்கமாக இருந்த தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தியதன் தொடர்ச்சியாக வங்கி லாக்கரை திறந்து இன்று சோதனை நடத்தினர். அதில் பலகோடி சொத்து மதிப்புள்ள சொத்துப்பத்திரங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவதற்கு முன் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளும் அதிமுக அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாராகவும், நடவடிக்கை இல்லாததால் உயர் நீதிமன்றத்தில் வழக்காகவும், ஆளுநரிடம் புகாராகவும் அளித்தது. ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை நிச்சயம் என திமுக தலைவர் ஸ்டாலின் மேடைகளில் பேசினார்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சொத்து குவிப்பு புகாரில், முறைகேடு புகாரின் கீழ் 5 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும் அவர்களோடு நெருக்கமாக இருந்தவர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடு அலுவல்கங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர். அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பணமும், சொத்து குவிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தகவல் வெளியானது.

எடப்பாடியின் நெருங்கிய நண்பர் வீடு, அலுவலகங்களிலும் சோதனை
அ.தி.மு.க.வின் சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கித் தலைவருமான இளங்கோவன். தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் வருமான வரி துறைக்கு இவர் மீது புகார் சென்றது. இதையடுத்து முசிறியில் இயங்கிவரும் எம்.ஐ.டி வேளாண் பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி பாலிடெக்னிக் கல்லூரி, கல்லூரியின் செயலாளர் ஆதித்யா, சுவாமி ஐயப்பன் அறகட்டளை ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த மாதம் 22 ஆம் தேதி சோதனை நடத்தினர். இதில் வங்கிகளின் லாக்கர் சாவிகளும் கிடைத்தது.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்-கண்டுக்கொள்ளாத ஓபிஎஸ்
இளங்கோவன் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாக கூறப்பட்டது. இந்த சோதனையை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டித்து அறிக்கை விட்டார். ஆனால் ஓபிஎஸ் இதுகுறித்து அறிக்கை வெளியிடவில்லை. எடப்பாடி பழனிசாமியின் தனி அறிக்கையாக இது வெளியானது.

“லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்ற பெயரில் அதிமுக தொண்டர்களை அச்சுறுத்த நினைக்கின்றனர். கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் வீடுகளில் சோதனை என்ற பெயரில் திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு விரைவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். அதிமுகவை அழிக்க நினைக்கும் திமுக அரசின் தொடர் முயற்சிகள் முறியடிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

வங்கி லாக்கரில் சிக்கிய சொத்து பத்திரங்கள்

இந்நிலையில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையின் தொடர்ச்சியாக கைப்பற்றப்பட்ட வங்கி லாக்கர் சாவிகளை வைத்து லாக்கர்களை போலீசார் சோதனை நடத்த நீதிமன்ற அனுமதி பெற்று இன்று இன்று வங்கி லாக்கர்களை திறந்து சோதனையிட்டனர்.

போலீஸார் திறந்த வங்கி லாக்கரும், சிக்கிய சொத்துபத்திர ஆவணங்களும்

போலீஸார் வங்கி லாக்கர் சாவிகளை வைத்து இரண்டு வங்கிகளில் உள்ள லாக்கர்களை நேற்று திறந்துள்ளனர். இதில் முக்கியமானது சேலம் மத்திய கூட்டுறவு சங்க வங்கி லாக்கராகும். இதன் தலைவராக இளங்கோவன் பதவி வகித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீஸார் இளங்கோவனின் வங்கி லாக்கரை திறந்து நடத்திய சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதன் எண்ணிக்கை 30 வரை இருக்கும் என லஞ்ச ஒழிப்புத்துறை வட்டார தகவலாக உள்ளது.

இளங்கோவனிடம் சம்மன் அனுப்பி விசாரணை

ஏற்கெனவே 26 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்ற பணம், நகை, ஆவணங்கள், தற்போது சிக்கியுள்ள ஆவணங்கள், சொத்துப்பத்திரங்கள் இவைகளை வைத்து இளங்கோவனை அழைத்து விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகள் : எம்.ஆர்.கிருஷ்ண பிரபு, மதுரை.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button