ஜெயலலிதா நினைவிடத்தில் டிசம்பர் 5-ம் தேதி மரியாதை செலுத்த செல்லும் சசிகலா, டெல்லி திரும்பிப் பார்க்கும் வகையில் ஆதரவாளர்கள் கூட்டம் அலைமோத வேண்டும் என விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
நிர்வாகிகளிடம் போன் உரையாடல், சுற்றுப்பயணம் என எந்த அஸ்திரமும் பெரிதாக தமக்கு அதிமுகவை கைப்பற்ற கைகொடுக்காததால் தமது பலத்தை நிரூபிப்பது ஒன்றே இதற்கு வழி என அவர் கருதுவதாக கூறுகிறார்கள் உள் விவரமறிந்தவர்கள்.
தினகரனும், சசிகலாவும் டிசம்பர் 5-ம் தேதி தனித்தனியாக ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தவிருப்பது கவனிக்கத்தக்கது.
மறைந்த ஜெயலலிதாவின் நினைவு நாள் வரும் டிசம்பர் 5-ம் தேதி வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறைவாசத்துக்கு பிறகு முதல்முறையாக ஜெயலலிதா நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் சசிகலா. இதனால் மெரினாவில் ஆதரவாளர்கள் கடல் போல் திரள வேண்டும் என விரும்பும் அவர், இதன் மூலம் டெல்லியின் கவனத்தை ஈர்க்கவும் திட்டமிட்டுள்ளாராம். குமரியில் தொடங்கி கும்மிடிப்பூண்டி வரை உள்ள சசிகலா ஆதரவாளர்களும், அமமுக நிர்வாகிகளும் டிசம்பர் 5-ம் தேதி சென்னையில் இதற்காக குவிய இருக்கிறார்கள்.
சசிகலாவுடன் இணைந்து வந்து தினகரன் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனித்தனியாக சென்று மரியாதை செலுத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது. சிறையில் இருந்து விடுதலையானது முதலே அமைதி, பொறுமை, நிதானம் என அரசியல் செய்து வரும் சசிகலா, இனி தனது புதிய அஸ்திரமாக தொண்டர் பலத்தை வெளிச்சம் போட்டுக்காட்ட முன் வந்திருப்பது கவனிக்கத்தக்கது. ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா வருகை தரும் போது அமமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரை வரவேற்க பெருந்திரளாக திரண்டு நிற்பார்கள் என்றும் ஆனால் அவர்கள் கைகளில் அமமுக கொடிகளை பார்க்க முடியாது எனவும் கூறுகிறார் முக்கிய நிர்வாகி ஒருவர்.
நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அலைபேசி மூலம் உரையாடல், சுற்றுப்பயணம் என பல அஸ்திரங்களை சசிகலா கையில் எடுத்தும் அவைகள் எதுவுமே அதிமுகவை மீட்பதற்கான வழிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் பழையப்படி மீண்டும் சில அதிரடிகளை அரங்கேற்ற விரும்பும் சசிகலா, அதற்கேற்றவாறு தனது ஒவ்வொரு நகர்வையும் மிகுந்த கவனத்துடன் முன்னெடுக்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் தஞ்சைக்கும் பிறகு அங்கிருந்து கார் மூலம் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டுமே சசிகலா சுற்றுப்பயணம் செய்தார். மேற்கொண்டு அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆதரவாளர்களை அணிதிரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், மழைவெள்ளம் அதற்கு குறுக்கீடு செய்துவிட்டது. இதனிடையே டிசம்பர் 5-ம் தேதிக்கு பிறகு மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.