மதுரையில் பைபாஸ் ரோட்டையும், ஆக்கிரமிப்புகளையும் பிரிக்கவேமுடியாது என்ற நிலையில் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் நிலவுவதுடன், விபத்து அபாயமும் உள்ளது.பைபாஸ் ரோட்டின் இரு புறமும் சர்வீஸ் ரோடுகளை ஆக்கிரமித்த கடைக்காரர்கள் மெயின் ரோட்டோரங்களையும் தற்போது ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால் ஏற்படும் நெரிசலால் அவ்வப்போது விபத்துக்கள் நடக்கின்றன. தற்போது ரோட்டோரம் உள்ள தள்ளுவண்டி கடைகளை எதிர் காலங்களில் ரோட்டின் நடுவில் தள்ளி கொண்டு சென்று வைத்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. அந்தளவிற்கு ஆக்கிரமிப்பாளர்கள் பைபாஸ் ரோட்டை கையில் எடுத்து பந்தாடி வருகிறார்கள். நெடுஞ்சாலை, மாநகராட்சி மற்றும் போலீசாரும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தங்கள் வேலையல்ல என ஆழ்ந்த துாக்கத்தில் உள்ளனர். இந்த அதிகாரிகள் வாகனங்கள் பைபாஸ் ரோட்டை கடக்கும் நேரங்களில் மட்டும் தள்ளுவண்டிகளை அருகிலுள்ள தெருக்களுக்கு கொண்டு சென்று விடுகின்றனர். அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட ஒதுங்கி, கடந்து செல்ல முடியாத அளவிற்கு பைபாஸ் ரோட்டில் கடைகள் நடத்தப்படுகின்றன.