செய்திகள்

முப்படைகளின் தலைமைத் தளபதியாக அடுத்து பதவி வகிக்கப் போவது யார்???

தமிழகத்தின் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தளபதி பிபின் ராவத் திடீரென காலமானதால், முப்படைகளின் தலைமைத் தளபதியாக அடுத்து பதவி வகிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பதவியை நீண்ட காலத்திற்கு காலியாக வைத்திருக்க முடியாது என்பதால், விரைவில் புதிய முப்படைகளின் தலைமைத் தளபதி (chief defence staff (CDS)) நியமிக்க அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. அடுத்த ஏழு முதல் பத்து நாட்களில் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி நிரப்பப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விதிகளின்படி, ஆயுதப்படைகளின் எந்த கட்டளை அதிகாரிகளும் அல்லது கொடி அதிகாரிகளும் (Commanding officers or flag officers of the armed forces) இந்த பதவிக்கு தகுதியானவர்கள்.

இந்த பதவி உருவாக்கப்பட்ட பிறகு முதன்முதலில் நியமிக்கப்பட்டவர் ஜெனரல் பிபின் ராவத் (General Bipin Rawat) என்பதால், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியை நியமிப்பதில் எந்த முன்னுதாரணமும் இல்லை என்பதால், முக்கிய நியமனம் செய்வதற்கு முன் அரசாங்கம் சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். அரசு மேற்கொள்ளும் நியமனங்களில் முன்னுதாரணமானது மிகவும் முக்கியமானது. அதுமட்டுமல்லாமல், அடுத்த CDS ஆக ஒரு புதிய அதிகாரியை நியமிக்கும்போது பல அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஜெனரல் பிபின் ராவத் டிசம்பர் 31, 2016 அன்று 26வது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். லெப்டினன்ட் ஜெனரல்கள் பிரவீன் பக்ஷி மற்றும் PM ஹரிஸ் என இந்திய ராணுவத்தின் இரு அதிகாரிகளுக்கு அடுத்து பட்டியலில் இருந்தவர்களைத் தவிர்த்து முப்படைகளின் தலைமைத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டது அசாதாரணமானது. ஆனால் அசாதாரணமான நியமனங்களைச் செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

CDS ஆக தகுதியுடைய அதிகாரிகள் நான்கு நட்சத்திர ஜெனரல் அல்லது இந்திய விமானப்படையின் Air Chief Marshal மற்றும் இந்திய கடற்படையின் அட்மிரல் (Admiral) பதவிகளுக்கு சமமான பொறுப்புகளில் இருக்க வேண்டும். அதோடு, இந்திய ராணுவம், இந்திய விமானப்படை அல்லது இந்திய கடற்படையில் மூன்று நட்சத்திர அதிகாரியாக இருப்பவரும், முப்படை தலைமைத் தளபதியாக நியமிக்கப்படலாம், ஆனால் அந்தந்த சேவைகளில் நான்கு நட்சத்திர அதிகாரியாக ஆவதற்கு தகுதியுடையவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகள் மூவருமே இந்தப் பதவிக்கு தகுதியுடையவர்கள் ஆவர்கள்.

ஜெனரல் ராவத் தனது பரந்த ராணுவ அனுபவத்தின் அடிப்படையில் CDS ஆக நியமிக்கப்பட்டாலும், அவரது நிபுணத்துவம் மற்றும் அரசியல் கூர்மை ஆகியவை அனைவராலும் பாராட்டப்படுவது. எனவே அவற்றின் அடிப்படையில் தகுதியான எந்த அதிகாரியையும் அரசாங்கம் தேர்வு செய்யலாம்.

ஜெனரல் பிபின் ராவத் மற்றும் பிற பாதுகாப்புப் பணியாளர்கள் உயிரிழந்ததற்கு காரணமான ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Security (CCS)) புதன்கிழமை கூடியது. அதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா மற்றும் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர், இதில் CCS உறுப்பினர்களுக்கு துயர சம்பவம் குறித்து விளக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் புதிய CDS நியமனம் குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

பிபின் ராவத் பயணம் செய்தது Mi-17V-5 வகை ஹெலிகாப்டர். ரஷ்யாவின் கஸான் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ராணுவ ஹெலிகாப்டர் இது. 2015ம் ஆண்டில் இந்த ஹெலிகாப்டர் ஒன்றின் விலை 145 கோடி ரூபாய்.

உலகின் மிக நவீனமான ஹெலிகாப்டராக இது கருதப்படுகிறது. ராணுவத் தாக்குதல் நடத்துவது, வீரர்களை ஏற்றிச் செல்வது, எல்லைக் கண்காணிப்பு, தீயணைப்பு, ராணுவத்துக்கு சரக்குகளை எடுத்துச் செல்வது என எல்லாப் பணிகளுக்கும் பயன்படுகிறது.

அதிகபட்சமாக 36 பேர் வரை பயணம் செய்யக்கூடிய பெரிய ஹெலிகாப்டரில் 4,500 கிலோ வரை பொருட்கள் எடுத்துச் செல்லலாம். மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும் இந்த ஹெலிகாப்டரில், அதிகபட்சமாக 580 கி.மீ தூரம் வரை தொடர்ச்சியாக பயணிக்கலாம்.

Mi-17V-5 ஹெலிகாப்டர்

சில ஹெலிகாப்டர்களை இரவில் இயக்க முடியாது. ஆனால், இது இரவு பகல் என எந்த நேரத்தில் பயணம் செய்யும். குளிர் நிறைந்த உயரமான மலைகள், பாலைவனங்கள் என எந்த தட்பவெப்பத்திலும் இயங்கும். 6 ஆயிரம் மீட்டர் உயர மலைப்பகுதியில் கூட அநாயாசமாக இது பயணம் செய்யும்.

இமயமலையின் பனி படர்ந்த சியாச்சின் பிரதேசத்தில் எல்லைக்காவல் புரியும் வீரர்களுக்கு முன்பெல்லாம் ஆயுதங்களையும் உணவுப்பொருட்களையும் எடுத்துச் சென்று தருவது கடினமாக இருந்தது. Mi-17V-5 ஹெலிகாப்டர் வந்த பிறகே அந்தப் பிரச்னை தீர்ந்தது. இப்போது சியாச்சினில் இருக்கும் வீரர்களுக்கு எல்லாவற்றையும் சுமந்து செல்வது இந்த ஹெலிகாப்டர்கள் (IAF Helicopter) தான்.

இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகள், ராக்கெட்கள், மெஷின் கன்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கும். சர்ஜிகல் ஸ்ட்ரைக், தீவிரவாதிகளை வேட்டையாடுதல் போன்ற விஷயங்களுக்கு இது அதிகம் உதவும். அதேபோல, ஏவுகணைத் தாக்குதல்களை சமாளிக்கும் பாதுகாப்பு கவசமும் இதில் இருக்கும்.

இதை இயக்கும் பைலட்டால் இரவு நேரத்திலும் துல்லியமாகப் பாதையைப் பார்க்க முடியும். மேலும் ஆட்டோ பைலட் சிஸ்டம் பொருத்தப்பட்ட மிகச் சில ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்று. அதனால், பைலட் இல்லாமலும் இது தானாக இயங்கும்.

கவச வாகனம் போல பாதுகாப்புத் தகடுகள் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர் என்பதால், விபத்தில் சிக்கினாலும் உள்ளே இருப்பவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு அதிகம். இதன் எரிபொருள் டேங்கும் விபத்தில் வெடித்து சிதறி எரியாத படி பாலியூரிதேன் பாதுகாப்பு கொண்டது. தீவிபத்து ஏற்பட்டால் அணைக்கும் கருவிகளும் உள்ளன. என்றாலும், பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறி எரிந்திருக்கிறது.

பொதுவாக ரஷ்ய போர்க்கருவிகளையோ, ராணுவ விமானங்களையோ அமெரிக்கா வாங்காது. ஆனால், ஆப்கானிஸ்தான் போரில் பயன்படுத்துவதற்காக ரஷ்யாவிலிருந்து 63 Mi-17V-5 ஹெலிகாப்டர்களை வாங்கியது.

Mi-17V-5 ஹெலிகாப்டர்

இந்திய விமானப்படை விரும்பி வாங்கும் ஹெலிகாப்டராக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் 163 Mi-17V-5 ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்கியுள்ளது. இந்தியாவில் இவற்றைப் பழுது பார்க்கும் வசதிகளையும் ரஷ்யன் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் ஏற்படுத்தித் தந்துள்ளது.

மிகவும் பாதுகாப்பானது என்பதால், வி.ஐ.பி-க்கள் பயணம் செய்வதற்காக இதில் 10 ஹெலிகாப்டர்கள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் என்று பலருமே குறுகிய தூரப் பயணங்களுக்கு பயன்படுத்துவது இந்த ரக ஹெலிகாப்டரைத் தான்.மிக அரிதாகவே இந்த ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கும். அப்படி ஒரு விபத்தில் இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியே சிக்கியது சோகம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button