“முப்படை தளபதி மரணத்தை பார்த்து சிரிக்கும் திமுகவினர்” பதிவால் சர்ச்சை : மாரிதாஸ் கைது!!
யூ-டியூபர் மாரிதாஸ் தனது சமூக வலைதள பக்கங்களில் அரசியல் மற்றும் சமூக கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதில் ஒரு சில பதிவுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன. சமூக வலைதளங்களில் கடும் விவாதங்கள், கருத்து மோதல்களை ஏற்படுத்துகின்றன.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவைத் தொடர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், மாரிதாஸ் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.’திக, திமுக ஆதரவாளர்கள் பலரும் ராணுவ தளபதி விபத்தில் மரணம் அடைந்ததை கேலி செய்யும் விதமாக பதிவுகள் இடுவதும், சிரிப்பதுமாக எமோஜி போடுவதை காண முடிகிறது.
ஒவ்வொரு முறையும் இதைச் செய்கிறார்கள். பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை’ என மாரிதாஸ் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்ததாக கூறி மாரிதாசை, மதுரை புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
மாரிதாஸ் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் மதுரை மாவட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாரிதாசை கைது செய்யக்கூடாது என போலீசாரை தடுத்தனர். ‘பாரத் மாதா கி ஜே’ என்றும் முழக்கமிட்டனர்.இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு மாரிதாசை கூட்டிச் சென்றனர்.
இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் உருவானது.ஏற்கெனவே, யூ-டியூப் தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்த கிஷோர் கே.சுவாமி, சாட்டை துரைமுருகன், மதன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.