தடுப்பூசி செலுத்திருந்தால் தான் கல்லூரியில் அனுமதி!!
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு அனுமதி இல்லை என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு ஒமைக்ரான் வகை பாதிப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இன்று (10ம் தேதி) ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது: “18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு கல்லூரியில் அனுமதி இல்லை. கல்லூரிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்” என்றார்.