திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் இனி பேருந்தில்!! ஆந்திர மாநிலத்தின் புதிய திட்டம்!!
திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக நாள்தோறும் 1,000 விரைவு தரிசன டிக்கெட்டுகளை ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளில் டிக்கெட் எடுக்கும் போதே விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின்படி, ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருப்பதிக்கு டிக்கெட் எடுக்கும் போதே, கூடுதலாக ரூ.300 செலுத்தி விரைவு தரிசன டிக்கெட்டையும் எடுத்துக் கொள்ளலாம்.திருப்பதி திருமலையில் ஒவ்வொரு நாளும் காலை 11 மணிக்கும், மாலை 4 மணிக்கும் விரைவு தரிசனம் மூலம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு பேருந்து டிக்கெட்டுடன் விரைவு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வசதியாக திருப்பதி பேருந்து நிலையத்திலேயே உதவி மையங்கள் செயல்பட இருக்கின்றன.ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, பெங்களூரு, காஞ்சிபுரம், புதுச்சேரி, ஹைதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து நாள்தோறும் 650 பேருந்துகள் திருப்பதிக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நகரங்களில் இருந்து பேருந்து மூலம் வருவோர், இவ் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து பயணத்துக்காக முன்பதிவு செய்யும் ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகத்தின் இணையதளமும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி முதல் மாற்றப்படுகிறது. அதன்படி, இதுவரை பயன்படுத்தி வந்த www.apsrtconline.org.in இந்த இணையதளத்துக்குப் பதிலாக, பிப்ரவரி முதல் www.apsrtconline.in என்ற இணையதளம் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு போல் சர்வ தரிசன டோக்கன்களின் முன்பதிவும் இணையதளம் மூலம் தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது.
தரிசன அனுமதி உள்ளவர்கள், தங்களுடன் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தரிசன நாளுக்கு 72 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கோவிட் பரிசோதனையின் நெகட்டிவ் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.
தரிசன அனுமதி உள்ள பக்தர்கள் காலை 6 மணிக்குப் பின்னர் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும், 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். திருமலைப் பாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.