செய்திகள்

தலைமை ஆசிரியர் காரில் 36 லேப்டாப்கள்..!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் 1084 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் 34 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ரா, முதுகலை ஆசிரியர் செந்தில் என்பவரை மாணவர்கள் மத்தியில் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆசிரியர் செந்தில் பள்ளியிலேயே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவரை மீட்ட சக ஆசிரியர்கள் அவரை மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் சித்ரா மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். ஆனால் ஆசிரியர்கள் அளித்த புகார் மீது இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாததோடு, இரண்டு தினங்களுக்கு பின் இன்று தலைமை ஆசிரியர் சித்ரா மீண்டும் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பள்ளி ஆசிரியர்கள் 20 க்கும் மேற்பட்டோர் ஆசியர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போடாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து தலைமை ஆசிரியை சித்ரா தனது காரில் பள்ளியை விட்டு வெளியேற முயற்சித்துள்ளார். இதனை கண்ட பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் காரை வழிமறித்து உள்ளனர். அப்போது காரில் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 36 மடிக்கணினிகள் இருந்ததால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பள்ளி வளாகத்தின் வாசல் கதவை அடைத்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பூட்டினர்.

இதனையடுத்து தகவலறிந்து வந்த பாலையூர் காவல் ஆய்வாளர் விசித்ராமேரி மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையை தொடர்ந்து தலைமை ஆசிரியர் சித்ரா மீது விசாரணை நடத்தி துறைரீதியான நடவடிக்கை எடுக்க கல்வித்துறைக்கு பரிந்துரைக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்தனர்.

காவல்துறையினரின் உத்தரவாதத்தை தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலைந்து சென்றனர். மேலும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தலைமை ஆசிரியர் பள்ளியை விட்டு வெளியேறும் போது எதற்காக பள்ளியில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 36 மடிக்கணினிகளை எடுத்து செல்ல வேண்டும் என்றும்? பல்வேறு சர்ச்சைகளுக்கும் மத்திய கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்வது ஏன் என அப்பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.மேலும் இது குறித்து தலைமை ஆசிரியர் சித்ரா கூறுகையில் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் என் மீது அதிருப்தியில் இருக்கும் பட்சத்தில் எனது பொறுப்பில் உள்ள மடிக்கணினிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் இவற்றை பாதுகாப்பாக வேறிடத்தில் வைப்பதற்கு பள்ளியிலிருந்து எடுத்துச் சென்றதாக தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button