“அப்பனே எக்ஸ்பிரஸே” ஒன்றரை வருடத்திற்கு பிறகு மயிலாடுதுறை டூ திருச்சி எக்ஸ்பிரஸ் : தேங்காய் உடைத்த பயணி
மயிலாடுதுறையிலிருந்து திருச்சிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று காலை துவங்கியது, இனிப்புகள் வழங்கி பயணிகள் கொண்டாட்டம்
கொரோனா ஊரடங்கு காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டபோது, மயிலாடுதுறையிலிருந்து திருச்சி செல்லும் 8:15 மணி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இந்த ரயில் சேவை இன்று காலை துவங்கியது.
காலை 8:15 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு 10.40 மணிக்கு சென்றடைகிறது. மீண்டும் திருச்சியில் இருந்து மதியம் 12 50 மணிக்கு புறப்பட்டு 15:15 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேர்கிறது.
தற்போது வார வேலை நாட்களில் மட்டும் இந்த ரயில் இயங்கும் என்றும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வேலைக்கு செல்பவர்களும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பெரிதும் உதவியாக இருந்த இந்த ரயில் சேவை மீண்டும் இன்று காலை துவங்கியது காரணமாக ரயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேநேரம் வர்த்தகர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் பயன்படுத்தும் வகையில் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் இருந்து இன்று காலை புறப்பட்ட ரயிலுக்கு சூடம் காட்டி தேங்காயை உடைத்து இனிப்புகள் வழங்கி ரயில் பயணிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்திகள் : ச.ராஜேஷ், நாகை