பிரதமர் மோடி தமிழ்நாடு வரும் போதெல்லாம் அவரை திமுக எப்போதும் வரவேற்க வேண்டும். எதிர்க்க கூடாது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் மோடி பொங்கலை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு வர இருக்கிறார். பிரதமர் மோடி வரும் ஜனவரி 12ம் தேதி தமிழ்நாடு வருகிறார். தமிழ்நாட்டில் மொத்தம் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி இந்த நிகழ்வில் திறந்து வைக்க இருக்கிறார்.அதன்பின் மறுநாள் மதுரையில் பொங்கல் விழாவை கொண்டாட உள்ளார். பிரதமர் மோடியின் வருகைக்காக தமிழ்நாடு பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது.
திமுக நிலைபாடு
இதற்கு பிரதமர் மோடி தமிழ்நாடு வந்த போதெல்லாம் அதை திமுக எதிர்த்து உள்ளது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக பிரதமர் மோடியை வருகையை கோ பேக் மோடி என்ற பிரச்சாரம் மூலம் கடுமையாக எதிர்த்தது. தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது கூட பிரதமர் மோடியின் வருகையை திமுக கடுமையாக எதிர்த்து வந்தது. ஆனால் இந்த முறை திமுக பிரதமர் மோடியின் வருகையை எதிர்க்க போவதில்லை. ஏனென்றால் திமுக அழைப்பின் பெயரில்தான் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.
தமிழ்நாடு வருகை
தமிழ்நாடு திமுக அரசின் அழைப்பின் பெயரில்தான் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் திமுக இந்த முறை பிரதமர் மோடியின் வருகையை எதிர்க்காது என்று தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக எந்த விதமான கருத்தும் தெரிவிக்க கூடாது என்று திமுக நிர்வாகிகளுக்கு தலைமையில் இருந்து அறிவுரை சென்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியும் இந்த முறை பிரதமர் மோடியின் வருகையை எதிர்க்க மாட்டோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
கருத்து
திமுக எம்பி ஆர்எஸ் பாரதி தெரிவித்த கருத்தில், பிரதமர் மோடியின் வருகைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். அவரை நாங்கள்தான் அழைத்து இருக்கிறோம். அவர் விருந்தினர். அவரை நாங்களே எப்படி எதிர்க்க முடியும். நாங்களே அழைத்துவிட்டு நாங்களே அவர்களை எதிர்ப்பது எப்படி நியாயமாக இருக்கும். பிரதமர் மோடி எப்போதும் எங்களுக்கு எதிரி இல்லை. இந்துத்துவாதான் எதிரி. நாங்கள் அதிமுக போல அவர்களுக்கு தலையாட்டினால்தான் தவறு. ஆனால் நாங்கள் தனித்தே செயல்படுவோம். கருத்தியல் ரீதியான மோதல் வேறு, அரசு நிகழ்வு வேறு என்று விளக்கம் அளித்தார்.
அண்ணாமலை பேட்டி
இந்த நிலையில் திமுகவின் இந்த நிலைப்பாடு குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், திமுக ஆட்சிக்கு வந்த போது முதல் இரண்டு மாதம் எதிர்க்கட்சி போலவேதான் பேசிக்கொண்டு இருந்தனர். எங்களுக்கு வேக்சினேஷன் கொடுக்கவில்லை. எங்களுக்கு இது கொடுக்கவில்லை. அது கொடுக்கவில்லை என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தனர். ஆனால் பாரத பிரதமரை பொறுத்தவரை திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது எப்படி இருந்தாரோ. இப்போது திமுக ஆளும் கட்சியாக இருக்கும் போதும் அப்படிதான் இருக்கிறார்.
கோ பேக் மோடி
அவரிடம் எந்த விதமான மாற்றமும் இல்லை. அவரிடம் எந்த விதமான மாற்றமும் இருக்காது. திமுக இப்போது உணர்ந்து கொண்டார்கள். திமுகவை பொறுத்தவரை இணக்கமாக செல்ல வேண்டும் என்பதை திமுக உணர்ந்து கொண்டுள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக செல்லும் போது மாநிலத்திற்கு அதுதான் நல்லது. எப்போதும் ஒரு மாநிலத்தை பிரித்து பார்க்க கூடிய அரசு பாஜக அரசு கிடையாது. அதனால் இனி பிரதமர் மோடியை திமுக வரவேற்க வேண்டும் . பிரதமர் மோடி எப்போது தமிழ்நாடு வந்தாலும் திமுகவின் தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லோரும் சேர்ந்து அவரை வரவேற்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இத்தனை நாட்கள் பிரதமர் மோடியின் வருகையை எதிர்க்கட்சியாக இருந்த திமுக எதிர்த்த நிலையில், இனிமேல் பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தால் அவரை திமுக எப்போதும் வரவேற்க வேண்டும். எதிர்க்க கூடாது என்று அண்ணாமலை உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.