புஷ்பா படம் எதிரொலி : கொலைக்காரனாக மாறிய சிறுவர்கள்!!
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து பெரும் வெற்றிப்படம் புஷ்பா. அதிரடி ஆக்சன் நிறைந்த இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ரசிகர்களை ஆட்டம் போட வைப்பதாக இருந்தது நமக்குத் தெரிந்த ஒன்று தான்.
ஆனால் புஷ்பா படத்தை பார்த்து அதில் வருவதுபோன்று சிறார்கள் ஒருவரை கொலை செய்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அப்படத்தில் இருக்கும் கொலை சம்பவத்தை மையமாக வைத்து அதே போல ஒரு கொலையை மூன்று சிறுவர்கள் செய்தனர். மேலும் கொலை சம்பவத்தை வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி புகழ் பெறவும் சிறுவர்கள் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது.
டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் சிபு என்ற இளைஞர், அதே பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த சிபுவை வழிமறித்த மூன்று சிறுவர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிபுவை சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும் சிபு கத்தியால் வெட்டப்படுவதை ஒரு சிறுவன் வீடியோ எடுத்துள்ளான்.
இதனிடையே, மூன்றுபேரும் தப்பிய நிலையில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய சிபுவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெல்லி காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது சிபு வெட்டப்படுவதை சிறுவன் ஒருவன் வீடியோ எடுக்கும் காட்சி பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ந்தனர். அதில் பதிவான காட்சிகள் அடிப்படையில் மூன்று சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர்.
சமீபத்தில் வெளியான புஷ்பா, Bhaukaal போன்ற கேங்ஸ்டர் படங்களை பார்த்த சிறுவர்கள், திரைப்படத்தில் வருவதைப் போல கொலை செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. சிறுவர்களிடம் இருந்து கொலையை வீடியோ எடுத்த மொபைல் போனையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
அவர்களின் செல்போனில் மட்டும் அந்த வீடியோ இருந்தது தெரியவந்தது. போலீசார் விரைந்து மூவரையும் பிடித்ததால் அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.