தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
மதுரை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை மின் கட்டணத்தை உயர்த்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் (தொழில்நுட்ப உறுப்பினர், சட்டத்துறை உறுப்பினர்) இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டத்துறை உறுப்பினர் இல்லை.
இந்நிலையில், தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. தற்போது பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதனால் ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதனை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவமிநாதன் பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத் துறையைச் சேர்ந்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதனால் சட்டத் துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம். மனுதார்கள் தங்களின் ஆட்சேபனைகள் மற்றும் கோரிக்கைகளை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்ய பட உள்ளதாக தெரிகிறது.