அரசு அங்கீகாரம் பெறாமல் தமிழகத்தில் போலியாக இயங்கும் நர்சிங் கல்லூரிகள்: எச்சரிக்கை
தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் 2 ஆயிரம் போலி நர்சிங் கல்லூரிகள் இயங்குவதாக தமிழ்நாடு செவிலியர் பள்ளிகளின் மாநில சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக ஒரு நர்சிங் கல்லூரி தொடங்க வேண்டும் என்றால், இந்திய நர்சிங் கவுன்சில் அனுமதி பெறவேண்டும். அதன் பிறகு மாநில அரசின் அனுமதி பெற்றுதான் கல்லூரி தொடங்க முடியும். ஆனால் தமிழகத்தில் சுமார் 2000 போலி நர்சிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இந்த கல்லூரிகளில் ஓராண்டு, 2 ஆண்டு பயிற்சி எனக்கூறி மாணவ, மாணவிகளிடம் பல லட்சம் பறித்து மோசடி செய்து வருகின்றனர். இவற்றில் படித்த சுமார் 40 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
அதனால் புதிதாக நர்சிங் படிக்க விரும்புவோர் நர்சிங் கவுன்சில் வெப்சைட்டுக்கு சென்று அரசு அங்கீகாரம் பெற்ற நர்சிங் கல்லூரிகள் குறித்து அறிந்து அதன்பின்னர் நர்சிங் பயிற்சி பள்ளியில் சேர வேண்டும்.
உரிய பதிவு பெற்ற நர்சிங் நிறுவனங்களில் 3 ஆண்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் சென்ற ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கை / விளம்பரத்தில், மாணவர்கள், அங்கீகாரம் பெற்ற நர்சிங் கல்லூரிகளில் மட்டுமே சேர்ந்து படிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
மேலும் அது அங்கீகாரம் பெற்ற நர்சிங் கல்லூரிகள் பட்டியலையும் அது வெளியிட்டு உள்ளது.
இந்தியா முழுவதும்
- ஆக்சிலரி நர்சிங் மிட்வைபரி சான்றிதழ் படிப்பு,
- ஜெனரல் நர்சிங் அண்ட் மிட்வைபரி டிப்ளமோ படிப்பு,
- பி.எஸ்சி. நர்சிங் பட்டப்படிப்பு ஆகிய பெயர்களில் மூண்டு நர்சிங் சார்ந்த படிப்புகள் அங்கீகரிக்கப்படுகிறது.
இதர பெயர்களில் மருத்துவமனைகள் மற்றும் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் சான்றிதழ்கள் செல்லுபடியாகாது என எச்சரித்துள்ளது.
அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் நர்சிங் படிப்புகள் பற்றிய விவரங்களை www.tamilnadunursingcouncil.com/recognised_institutions.php என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.