கரூர் மாவட்டம், த அடுத்த கீழவெளியூர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (70), இவரது கணவர் தங்கராசு. இவர்களுக்கு சரவணன் (40) என்ற மகன் இருக்கிறார். சரவணனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். மூதாட்டி பழனியம்மாள் தனது கணவர் இறந்த பிறகு மகன் சரவணன், மருமகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்.இந்த நிலையில் மூதாட்டி பழனியம்மாளை மருமகள் பேச்சைக் கேட்டுக் கொண்டு, மகன் சரியாக கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், மூதாட்டியின் ரேஷன் அட்டையை மருமகள் எடுத்து வைத்துக்கொண்டு, சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து தோகமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க தனியாக வந்த மூதாட்டி பழனியம்மாள் திடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மயக்கம் அடைந்து தரையில் படுத்து விட்டார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பில் இருந்த போலீசார் மற்றும் ஊழியர்கள் மூதாட்டியை எழுப்ப முயற்சித்தனர். அப்போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மூதாட்டியை எழுப்பி உட்கார வைத்து விசாரித்தார். காலை உணவு சாப்பிடாமல் வந்ததால் மயக்கம் அடைந்ததாக மூதாட்டி கூறியதால், அவருக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அங்கிருந்த ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மூதாட்டிக்கு உணவு வாங்கி கொடுத்தனர்.
