குற்றாலம் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
குற்றாலம் மெயின் அருவி அருகே நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20க்கும் அதிகமான கடைகள் எரிந்து நாசம் ஆகின. இதில் சுமார் 4 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரன், காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இன்று காலை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறியதுடன், நடந்த சம்பவத்திற்கு கோவில் நிர்வாக அதிகாரி கண்ணதாசன் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் மாலை 4 மணியளவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்தார். அவர் வருகைக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரன், காவல் கண்காணிப்பாளர் சாம்சன் மற்றும் அதிகாரிகள் ஆஜராகி பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர், உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அமைச்சருடன் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன், வடக்கு மாவட்ட செயலாளரும் சங்கரன் கோவில் தொகுதி எம்எல்ஏவுமான ராஜா, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.