பெண்ணின் படத்தை மார்பிங் செய்து வெளியிட்டவரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
தென்காசியில் பெண்ணின் படத்தை மார்பிங் செய்து வெளியிட்டவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த காஜா முகமது, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் என் மீது பதிவு செய்த வழக்கில் கடந்த 2 மாதத்துக்கும் மேல் சிறையில் உள்ளேன். எனக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கூடுதல் அரசு குற்றவியல் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, மனுதாரர் அதேபகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு பேஸ்புக் மூலம் தவறான தகவல்களை அனுப்பியுள்ளார். இதனால் இவரது பேஸ்புக் கணக்கை அவர் துண்டித்துள்ளார். மற்றொரு பேஸ்புக் கணக்கின் மூலம் சம்பந்தப்பட்ட நபரின் மனைவியின் படத்தை மார்பிங் செய்து, இன்ஸ்டாகிராமில் மனுதாரர் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மனுதாரரை கைது செய்தனர். விசாரணையில், அந்த பெண்ணின் படத்தை மார்பிங் செய்து, தகாத தொழிலில் ஈடுபடுபவர் என சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். இது, பெண்களுக்கு எதிரானது மட்டுமல்லாமல் சமுதாய சீர்கேடு நடவடிக்கையிலும் மனுதாரர் ஈடுபட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.
விசாரணை முடிவில், மனுதாரர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தீவிரமானது. பெண்ணின் படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இது பெண்ணின் ஒழுக்கத்தையும், அவரது குடும்பத்தையும் கடுமையாக பாதிக்கும். அதுமட்டுமல்லாமல் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களை, குறிப்பாக இளைய தலைமுறையினரின் கவனத்தை திசைதிருப்பும். இதை ஏற்க முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
விசாரணை முடிவில், மனுதாரருக்கு ஜாமீன் வழங்க இந்த கோர்ட்டு விரும்பவில்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.