திருவண்ணாமலையை அடுத்த வெளுகனந்தல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 14 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு விழாவும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டத்தின் 2-ஆம் கட்ட தொடக்க விழாவும் நடைபெற்றது.
விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் பாரதி ராமஜெயம் தலைமை வகித்தார். திருவண்ணாமலை எம்.பி. சி.என். அண்ணாதுரை, துரிஞ்சாபுரம் ஒன்றியக் குழுத் தலைவர் தமயந்தி ஏழுமலை, திமுக ஒன்றியச் செயலர் பா. ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் வி.பி. அண்ணாமலை வரவேற்றார்.
தமிழக சட்டப் பேரவைத் துணைத் தலைவர் கு. பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தை திறந்து வைத்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கிப் பேசினார்: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இந்தப் பகுதி கிராமங்களுக்கு எந்தத் திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி விவசாயிகளின் நலன் கருதி, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கட்டி முடிக்கும் நிலையில் உள்ளது என்றார்.