
திருப்பதிக்கு யாரும் வரவேண்டாம் : பக்தர்களுக்கு நிர்வாகம் வேண்டுகோள்…
தொடர் கனமழை காரணமாக திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு மலைப்பாதையில் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மலைப்பாதை சீரமைப்பு செய்யப்படும் வரை யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, திருமலைக்கு பயணிக்கும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மலைக்குச் செல்லும் சாலை கடந்த நவம்பர் 17 அன்று மூடப்பட்டது. சில தினங்களுக்கு பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே, திருப்பதி திருமலைக்கு இடையிலான இரண்டாவது மலைப்பாதையில் பெரிய சேதம் ஏற்பட்டது. அங்கு பெய்துவரும் கனமழை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. காலை நேரத்தில் மலைப்பாதையில் பயணம் செய்த வாகன ஓட்டிகள் கவனமாக செயல்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மண் சரிவின் போது பாறை உருண்டு விழுந்ததால் 3 சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. திருமலைக்கும் திருப்பதிக்கும் இடையே போக வர இரண்டு மலைப் பாதைகள் உள்ளன. மண்சரிவு காரணமாக 2வது மலைப் பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாறைகள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணியில் தற்போது தேவஸ்தான பொறியாளர்கள், வனத்துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். காத்திருந்த வாகனங்களை இணைப்பு சாலை மூலம் முதலாவது பாதை வழியே திருமலைக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலைகள் சேதம் அடைந்த பகுதியில் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவர் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், திருப்பதி பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று முன்பதிவு செய்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், 15 நாட்களுக்கு பின் அதே தரிசன டிக்கெட்டில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்றும், சாலை சீரமைப்பு பணி நடைபெறுவதால் திருப்பதிக்கு வருவதை தவிர்க்குமாறும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.