திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச. 13) நடைபெறுகிறது. அன்று மகா தீபத்தை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் 14 கி. மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையை வலம் வந்து அஷ்டலிங்க சந்நிதிகள், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபடுவது வழக்கம். எனவே, பக்தர்கள் கிரிவலம் வர இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறுநெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.
இதையடுத்து, நேற்று (நவம்பர் 22) நெடுஞ்சாலைத் துறையின் திருவண்ணாமலை வட்ட கண்காணிப்புப் பொறியாளர் ஆர். கிருஷ்ணசாமி, திருவண்ணாமலை கோட்டப் பொறியாளர் ப. ஞானவேல், உதவிக் கோட்டப் பொறியாளர் கே. அன்பரசு ஆகியோர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.
கிரிவலப் பாதையையும், நடை பாதையையும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகள், நடைபாதை கடைகள், தள்ளு வண்டிகள், இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் சசிகுமார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.
பொக்லைன் இயந்திரம், கிரேன், லாரி ஆகியவற்றின் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது