கள்ளக்குறிச்சியில் நிதி நிறுவன மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு உணவில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து, 1.82 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், பவித்ரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், (32); கள்ளக்குறிச்சி அண்ணாநகரில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்த ரகுபதிரெட்டி என்பவர், கடந்த 18ம் தேதி இரவு உணவில் மயக்க மாத்திரை கலந்து, மேலாளர் கார்த்திக் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுககு கொடுத்துள்ளார்.
அதில், அனைவரும் துாங்கிய நிலையில், அலுவலகத்தில் இருந்த 1. 82 லட்சம் ரூபாயை ரகுபதிரெட்டி கொள்ளையடித்துச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி எஸ். பி., ரஜத் சதுர்வேதி உத்தரவின்பேரில், டி. எஸ். பி., தேவராஜ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வினய்ஆனந்த், காவலர்கள் சிவராமன், பாஸ்கர் மற்றும் அஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இதில், மொபைல் போன் டவர் சிக்னலை வைத்து தலைமறைவாக இருந்த கர்நாடகா மாநிலம், மைசூர் உதயகிரி பகுதியை சேர்ந்த ரகுபதிரெட்டி, (47); என்பவரை நேற்று கைது செய்து, 1. 60 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.