கள்ளக்குறிச்சி நான்கு முனைச் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க. நிர்வாகிகள் 44 பேரை போலீசார் கைது செய்தனர்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு எதிராக கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, கள்ளக்குறிச்சியில் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, பா.ம.க. மேற்கு மாவட்டச் செயலாளர் தமிழரசன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் நான்கு முனைச் சந்திப்பு பகுதிக்கு நேற்று காலை 10.15 மணியளவில் வந்தனர்.
உடன், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து, கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பா.ம.க.வினர் சிலர் சாலைமறியலில் ஈடுபட முயற்சித்தனர்.மறியலில் ஈடுபட முயன்ற நிர்வாகிகளை போலீசார் குண்டுகட்டாகத் தூக்கி பஸ்களில் ஏற்றினர்.
கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க. நிர்வாகிகள் 44 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது, மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. காசாம்பூ பூமாலை, மாநிலச் செயற்குழு உறுப்பினர் ராமு, வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் நாராயணன், துணைச் செயலாளர் ஏழுமலை, இளைஞர் சங்க மாவட்டச் செயலாளர் பாபு, ஒன்றியச் செயலாளர்கள் அய்யப்பன், அன்பரசன், பாலு உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.