போளூர் சிவராஜ் நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (35). இவரது மனைவி லீனாமேரி (30). தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால் மனமுடைந்த லீனாமேரி, கோபித்துக்கொண்டு சந்தவாசலை அடுத்த கங்காரானந்தல் காலனியில் தனது அண்ணன் அந்தோனி வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், 11.12.2006 அன்று பேச்சுவார்த்தை நடத்தி தம்பதியை சேர்ந்து வாழ வைக்க வாருங்கள் என்று சாமுவேல் குடும்பத்தினர் தொலைபேசி மூலம் லீனாமேரி குடும்பத்தினரை அழைத்தனராம். இதையடுத்து, லீனாமேரி குடும்பத்தினர் போளூர், சிவராஜ் நகரில் உள்ள சாமுவேல் வீட்டுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, திருமணத்தின்போது லீனாமேரி குடும்பத்தினர் கொடுத்த சீர்வரிசைப் பொருள்கள், நகைகளை திருப்பிக் கொடுத்துவிடுங்கள் என்று லீனாமேரியின் அண்ணி சகுந்தலா கேட்டாராம்.இதனால் ஆத்திரமடைந்த சாமுவேல், தான் மறைத்து வைத்திருந்த பேனாகத்தியால் அவரது வலது முழங்கையில் பேனா கத்தியால் கிழித்து காயத்தை ஏற்படுத்தினார்.
இதுகுறித்து போளூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, சாமுவேலை கைது செய்தனர். இந்த வழக்கு திருவண்ணாமலை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட சாமுவேலுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.