கள்ளக்குறிச்சி நகரப்பகுதி அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில் குதிரைச்சந்தல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்- பஞ்சமிநாயகி தம்பதியின் குழந்தை அசோகமித்ரன், 5; சிகிச்சை பெற்று வருகின்றார்.
தனது பேரக்குழந்தையான அசோகமித்ரனை பார்ப்பதற்காக, வடக்கனந்தல் பகுதியை சேர்ந்த உலகநாயகி, 45; என்பவர், நேற்று பகல் 12:00 மணிக்கு மருத்துவமனைக்கு சென்றார்.அப்போது அங்கு பணியில் இருந்த சிறுவங்கூரை சேர்ந்த மாரியம்மாள், இவரிடம் பார்வை நேரம் முடிந்துவிட்டது. உள்ளே வரக்கூடாது என தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த உலகநாயகி, வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்கிக்கொண்டனர்.
இதனையடுத்து, மருத்துவமனை பணியாளரை, தாக்கிய பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள், மருத்துவமனை எதிரே, கச்சிராயபாளையம் சாலையில் நேற்று மதியம் 1:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயராகவன், பாஸ்கர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, பகல் 1:32 மணிக்கு இரு தரப்பினரையும் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் வரவழைத்து விசாரணை செய்து வருகின்றனர்.