
திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். மர்ம நபர்கள் அப்பா, அம்மா, மகன் என்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் படுகொலை செய்யப்பட்டது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. தோட்டத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்தவர்களை இரவோடு, இரவாக மர்ம நபர்கள் கொலை செய்து இருப்பது அந்த பகுதியில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பில்லாத அச்சுறுத்தலான ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த நிகழ்வை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஸ்காட்லாண்டியார்டு காவல்துறைக்கு இணையாகப் பேசப்பட்ட காவல்துறை, இன்றைக்கு முற்றிலும் செயலிழந்து, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி இருக்கிறது என்பதற்கு, இந்த நிகழ்வு ஒன்றே சான்றாகும். திருப்பூரில் நடந்த படுகொலைக்கான உண்மை காரணம் உடனடியாக கண்டறியப்பட்டு, கொலையைச் செய்த குற்றவாளிகளைக் கைது செய்து, அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும். அப்போது தான் இனிமேல் இதுபோன்ற கொடூர கொலைகள் நடக்காமல் மக்களைக் காப்பாற்ற முடியும். எனவே இந்த ஆளும் அரசு இனியும் வேடிக்கை பார்க்காமல் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி, படுகொலைகளில் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.