தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெனாயில், சோப்பு ஆயில், கைகழுவும் திரவம் தயாரிப்பதற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு, மகளிர் திட்ட இயக்குநர் என். எஸ். சரண்யாதேவி தலைமை வகித்தார்.
மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கிவைத்துப் பேசுகையில், மகளிர் சுயஉதவிக் குழுவினர் இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும். பிறகு, பெனாயில், சோப்பு ஆயில், கைகழுவும் திரவம் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
முகாமில் மகளிர் திட்டத்தின் உதவித் திட்ட அலுவலர்கள் ஜான்சன், உமா, ராஜீவ் காந்தி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சத்தியராஜ், ஆனந்த், சுகந்தி உள்பட மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.