திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(43), விவசாயி. இவரது மனைவி ரேணுகாம்பாள்(37). இவர்களது 2வது மகன் தனுஷ் அங்குள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த மாணவன் தனுஷ் வெளியே விளையாடுவதாக கூறிவிட்டு ஆப்பிளை எடுத்துக்கொண்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் நேற்று காலை கடலாடி போலீசில புகார் கொடுத்தனர். அதன்பேரில் எஸ்ஐ நாகராஜ் எஸ்எஸ்ஐ தமிழ்வாணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அங்குள்ள ஏரிக்கு சென்று பார்த்தபோது மாணவன் தனுஷ் எடுத்துச்சென்ற ஆப்பிள் மட்டும் கரையில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், போளூர் தீயணைப்பு வீரர்களை அங்கு வரவழைத்து ஏரியில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மதகில் சிக்கிய நிலையில் மாணவன் தனுஷ் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்கு பதிந்து,
வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவன் தனுஷ் எதற்காக ஏரிக்கு சென்றான்? எப்படி இறந்தான்? என விசாரித்து வருகின்றனர்.