கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் கிராமத்தின் வழியாக செல்லும் திருச்சி – சென்னை புறவழிச்சாலை மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால், அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலை வழியாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக சர்வீஸ் சாலையின் நடுவே திடீரென பெரிய அளவில் பள்ளம் விழுந்தது. இதில் அவ்வழியாக சென்ற ஆட்டோ ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஆட்டோ ஓட்டுநர் உயிர் சேதம் இன்றி தப்பினார். வாகனத்தின் முகப்பு கண்ணாடி உடைந்து பெரும் அளவு சேதம் ஏற்பட்டது. இந்த விபத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் வரிசையில் காத்து நின்றனர்.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். விபத்தை தடுக்கும் வண்ணம் புறவழிச்சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.