திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.அன்றைய தினம் அன்னதானம் வழங்க விண்ணப்பித்தவர்களுக்கு, மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் அனுமதி டோக்கன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தலைமை வகித்தார். தமிழக உணவு பாதுகாப்புத் துறையின் கூடுதல் ஆணையர் தேவபிரசாத், உணவு பாதுகாப்புத் துறையின் திருவண்ணாமலை மாவட்ட நியமன அலுவலர் ஏ. ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அன்னதானம் வழங்க விண்ணப்பித்த நபர்களுக்கு அனுமதி டோக்கன்களை வழங்கிப் பேசியதாவது: அன்னதானம் வழங்குவோர் வாழை இலை, பாக்கு மட்டைத் தட்டு, மந்தாரை இலை ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
உணவு சமைக்க தூய்மையான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். தூய்மையான, தரமான பொருள்களை பயன்படுத்தி உணவு சமைத்து வழங்க வேண்டும். அன்னதானம் வழங்குவோர் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழியை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மீறி பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அன்னதானம் வழங்குவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்றார்.