திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் தாக்கத்தால் பெய்த தொடர் மழையின் காரணமாக செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் செய்யாறு அருகேயுள்ள தண்டரை அணைக்கட்டில் நீர்வரத்து அதிகரித்தது.
நீர்வரத்து அதிகம் உள்ளதால் ஆற்றில் இறங்கி குளித்தல், நீர்நிலைகளில் இறங்கி புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், செய்யாறு காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முபாரக் (20). இவரும், இவரது நண்பர்களான தூயவன் (18), விமல் (18), ராஜபிரியன் (17), விஜய் (16), நேதாஜி (18), சுந்தர் (17) ஆகியோர் தண்டரை அணைக்கட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது, இளைஞர் முபாரக் அணைக்கட்டு பகுதி ஆற்றில் குதித்துள்ளார்.
நீர்வரத்து அதிகம் இருந்ததால் நீச்சல் அடிக்க முடியாமல் அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.அப்போது, அவரது நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். அரை கி.மீ. தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டு நீரின்றி இருந்த மணல் திட்டில் கரையேறினார்.
இதுகுறித்து அங்கிருந்து பொதுமக்கள் செய்யாறு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் மனோகரன் தலைமையிலான வீரர்கள் சென்று மணல் திட்டில் பரிதவித்துக் கொண்டிருந்த முபாரக் மற்றும் அவரது நண்பர்களை மீட்டனர்.