வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகியுள்ளது. இந்த தாழ்வுபகுதி மேலும் வலுவடைந்து தமிழக கடற்கரை ஓரம் நகர்ந்து மழையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்பதால் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது. மேலும் கடலில் தங்கி மீன் பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்களும் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும்.
இது தவிர மீனவர்கள் தங்களது படகு மற்றும் மீன்பிடி வலைகள் உள்பட அனைத்து வகை யான மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.