டிஜிட்டல் யுகத்தில் அடியெடுத்து வைத்த காலம் தொட்டே அலைபேசி, டேப், ஐ-பாட் அகியவற்றின் பயன்பாடு இளம் தலைமுறையினரைச் சீரழித்துவிடுமோ என்கிற அச்சம் எழத் தொடங்கியது. குறிப்பாக மாணவச் சமூகத்தின் மீது அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற பயம் தலைதூக்கியது. இன்றோ கரோனா வைரஸ் என்ற நிஜ உலக பூதமானது மாணவர்களின் நண்பனாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மாற்றியுள்ளது. வீட்டை விட்டு வெளியே வந்து பள்ளி, கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலைக்கு உலகெங்கிலும் உள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் டிஜிட்டல் கருவிகள் மட்டுமே நமக்கு கல்விக்கான பாலமாக உருவெடுத்திருக்கிறது. உலகெங்கிலும் இதே நிலைதான்.
சொல்லப்போனால் நம்முடைய அரசுப் பள்ளிப் பாடப் புத்தகங்கள் உட்பட பெருவாரியாக பள்ளி மாணவர்களின் கல்வியிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் அங்கம் வகிக்கத் தொடங்கிவிட்டது. பாடப் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கியூ ஆர் குறியீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் வழியாக பாடங்களைச் சுலபமாகவும் சுவாரசியமாகவும் பயில வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இது காலத்தின் தேவையாகவும் இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை கணினித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவு அவசியப்பட்டது. இன்றோ அது அன்றாட வாழ்க்கையோடு இணக்கமான ஒன்றாக மாறிப்போய்விட்டது. கல்வி, ஊடகம், போக்குவரத்து, வங்கித் துறை என பல்வேறு திசைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வீச்சு விரிவடைந்து வருகிறது.