திருநெல்வேலி; போலீஸ் ஸ்டேஷனில் வக்கீல் தாக்கப்பட்ட சம்பவத்தில், டி.எஸ்பி., இன்ஸ்பெக்டர் உட்பட, எட்டு போலீசார் மீது, 11 பிரிவுகளில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், பழவூர் அருகே மாறன்குளத்தை சேர்ந்தவர், வக்கீல் செம்மணி, 46.
இவர், 2017 ஆகஸ்டில், யாக்கோபுபுரத்தை சேர்ந்த ஐசக் செல்வகுமார் மீது, பழவூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, நாங்குநேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்குப் பதிவு செய்யவும், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் உள்ளிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், கோர்ட் பரிந்துரைத்தது.
தாக்குதல்
இதனால், ஆத்திரமுற்ற இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், 2017 நவ., 4 நள்ளிரவில், வக்கீல் செம்மணி வீட்டிற்கு சென்று, அவரை தாக்கினார்.
நள்ளிரவு, 1:00 மணிக்கு உவரி போலீஸ் ஸ்டேஷன்அழைத்து சென்று மீண்டும் தாக்கினார்.
அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தக் கோரி செம்மணியின் தங்கை, மறுநாள் வள்ளியூர் கோர்ட்டில் மனு செய்தார்.
கோர்ட், ஐந்து வக்கீல்கள் குழுவை உவரி போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி விசாரித்தது.
இதையடுத்து, செம்மணி காயங்களுடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தென் மாவட்ட வக்கீல்கள், திருநெல்வேலியில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, வள்ளியூர், டி.எஸ்.பி., சுகுமார் இடமாற்றம் செய்யப்பட்டார்.
மற்றவர்கள், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.
இதையடுத்து, வள்ளியூர், டி.எஸ்.பி., சுகுமார், பழவூர் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், எஸ்.ஐ.,க்கள் விமல்குமார், பழனி, முகமது, போலீசார் சாகர், செல்லத்துரை, ஜோஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, செம்மணி, 2018 ஜனவரி, 23ல் திருநெல்வேலி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய, கோர்ட் உத்தரவிட்டது.
இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
செம்மணி, கலெக்டரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, சேரன்மகாதேவி சப் – கலெக்டர் ஆகாஷ், விசாரணை நடத்தி, போலீசார் அத்துமீறி நடந்தது குறித்து, கலெக்டருக்கு அறிக்கை அளித்தார்.
இருப்பினும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் இறந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த துாத்துக்குடி வந்த, சி.பி.சி.ஐ.டி., – ஐ.ஜி., சங்கரிடம் வக்கீல் செம்மணி புகார் அளித்தார்.
அதன்பின்னும், வழக்குப்பதிவு செய்யவில்லை.
வழக்கு பதிவு செய்யாவிட்டால், ஆக., 3 ல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என, வக்கீல்கள் தெரிவித்திருந்தனர்.
11 பிரிவுகளில் வழக்கு
இதையடுத்து, திருநெல்வேலி, சி.பி.சி.ஐ.டி., ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசார், டி.எஸ்.பி., சுகுமார், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் உள்ளிட்ட, எட்டு போலீசார் மீது, ஜாமினில் வர முடியாத பிரிவு உட்பட, 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.