கோக்கு மாக்கு

திண்டுக்கல்லில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து நாசிக் தோள் என்னும் இசைக் குழுவை நடத்தி பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்கள்

தமிழகத்தின் பாரம்பரிய இசையில் தப்பாட்டம் ஒன்று. அதேபோல் தற்போது திண்டுக்கல்லில் பள்ளி கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தும் நாசிக் தோள் என்னும் இசை குழு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திண்டுக்கல் மேற்கு மரிய நாதபுரம் பகுதியில் ஃபேஸ் ஆன் மாஸ்க் என்னும் பெயரில் இந்த இசைக் குழு மிகப் பிரபலம் அடைந்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் இருபது மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த குழுவை உருவாக்கியுள்ளனர். இந்த மாணவர்கள் மற்றவர்களை எதிர்பார்க்காமல் தாங்களே பணம் சேர்த்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இசைக்கருவிகளை வாங்கியிருக்கிறார்கள்.

பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் இவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் இந்த இசைக்கருவியை இசைத்து பழகியுள்ளனர். தொடர்ந்து பயிற்சியும் எடுத்து வருகிறார்கள். மிக நேர்த்தியாக இசைப்பதோடு அதற்கேற்ப நளினமாக நடனமும் ஆடுகிறார்கள். இவர்களின் இசைக் குழு பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இந்த மாணவர்களின் இசைக்குழுவை பொதுமக்கள் அழைக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் 15,000 முதல் 20,000 ரூபாய் வரை இவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானத்தை தங்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கான கட்டணங்களை கட்டுவதோடு தங்களுக்கு தேவையான அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்கிறார்கள். அதோடு தங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவியும் வருகிறார்கள். தங்கள் படிப்பு செலவுக்கு பெற்றோரை எதிர்பார்க்காமல் இந்த இசைக் குழு மூலம் கிடைக்கும் வருமானத்தை இந்த மாணவர்கள் பயன்படுத்துவது மற்ற இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம். தற்போது கொரோனா காலம் என்பதால் எந்த விதமான திருவிழாக்களும் நடைபெறாததால் இவர்களுக்கு நிகழ்ச்சி கிடைக்காமல் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தை கொண்டு முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே இவர்களின் லட்சியம் என்கிறார்கள் இந்த மாணவர்கள்.

படிக்கும் காலத்தில் தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை வீணாக்காமல் இது போன்ற பயனுள்ள வகையில் இந்த மாணவர்கள் செலவழிப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. யாரும் கற்றுத் தராமல் தாங்களாகவே இந்த இசைக்கருவியை பல பலவிதமான இசை முறைகளோடு நளினமாக கற்றுக்கொள்கிறார்கள். படிக்கும் காலத்திலேயே நல்ல முறையில் சம்பாதிக்கும் இந்த இளைஞர்கள் சக மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணம் என்றால் மிகையில்லை.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button