கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட வாகனங்களும், வழக்கு பதிவு செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் என ஐநூறுக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் பல வாகனங்கள் காணமல் போனதாக புகார் எழுந்துள்ளது.
காவல் நிலையத்தில் உள்ள சில அதிகாரிகள் மற்றும் காவலர்கள் புரோக்கர்கள் மூலம் விற்பனை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் க்கு கிடைத்த தகவலின் படி அவர் திடீரென்று சில தினங்களுக்கு முன் வழக்கமான ஆய்வுப் பணிக்கு வருவது போல மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வந்து வாகன வழக்குகள் சம்மந்தமான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போது பல இருசக்கர வாகனங்கள் மாயமானது தெரியவந்தது.
இதனையடுத்து இது சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார். இதையடுத்து மார்த்தாண்டம் காவல் துறை ஆய்வாளர் ஆதிலிங்கபோஸ், உதவி ஆய்வாளர் சுரேஷ், மூன்று காவலர்கள் உள்ளிட்ட 5 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுதபடைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை ஆய்வு செய்ய தக்கலை சரக டிஎஸ்பி ராமசந்திரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு வாகனங்களையும் கோப்புகளையும் கணக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 25 க்கும் மேற்பட்ட வாகனங்கள் மாயமாகி இருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் எட்டு இருசக்கர வாகனங்கள் மாயமாகியதும் தெரியவந்துள்ளது.
காவல் நிலையத்தில் இருந்து வாகனங்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்
இது சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் கேட்ட போது ஆவணங்கள் சரிபார்க்காமல் பல வாகனங்கள் காவல் நிலையத்தை விட்டு வெளியே சென்று உள்ளது இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
கன்னியாகுமரி செய்தியாளர் சஞ்ஜீவன்