நவீன வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க 90 லட்சம் மதிப்பிலான நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் 10 லட்சம் மதிப்பிலான பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி உள்ளிட்டவைகளை அமைச்சர் கே சி வீரமணி வழங்கினார்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூபாய் 90 லட்சம் மதிப்பிலான நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் 10 லட்சம் மதிப்பிலான பேட்டரியில் இயங்கக்கூடிய சக்கர நாற்காலி உள்ளிட்ட மொத்தம் 1 கோடி மதிப்பலான இயந்திரங்களை அமைச்சர் கே சி வீரமணி வழங்கினார்.
வேளாண்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தப்பட்ட விழாவில் இந்திர மயமாக்கலை அதிகரிக்கும் பொருட்டும் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தினை சார்ந்த ஒன்பது ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு வேளாண் இயந்திர வாடகை மையம் அமைப்பதற்காக வேளாண் பொறியியல் துறையின் 80 சதவிகித மானிய உதவியுடன் தலா ரூபாய் 10 லட்சம் மதிப்பில் மொத்தம் 90 லட்சம் மதிப்பிலான நவீன இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சியானது ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
வழங்கப்பட்ட இயந்திரங்களை ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பானது, தங்களுடைய ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை கொண்டு, வேளாண் தொழிலாளர் படை அமைத்து, அதன் மூலம் வேளாண் இயந்திர வாடகை மையத்தை சிறப்பாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மையத்திலிருந்து கிராமப்புறங்களில் விவசாயிகள் உழவு மேற்கொள்வதற்கும், நடவு செய்வதற்கும், களை எடுப்பதற்கும், மருந்து தெளிப்பதற்கு மற்றும் அறுவடை செய்வதற்கான இயந்திரங்களை குறைந்த வாடகையில் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த இயந்திரங்கள் வழங்கும் விழா குறித்து பத்திரப்பதிவு துறை மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே சி வீரமணி கூறும் பொழுது,
பெண்களை நம்பி கொடுக்கப்பட்ட எந்த வேலை என்றாலும் சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் நம்பியதால் இன்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விவசாயத்தை மேம்படுத்தும் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்திருக்கின்றோம். மற்றும் முதுகுதண்டு செயல்படாத 10 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான ஆட்டோமேட்டிக் சக்கர நாற்காலியை கொடுத்திருக்கின்றோம் நடமாடும் covid-19 பரிசோதனை வாகனத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறோம். இதுபோன்ற மக்களுக்கு தேவையான எல்லா நன்மைகளையும் அம்மா அரசால் மட்டுமே செய்ய முடியும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவன் அருள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மகேஷ்பாபு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி நகராட்சி ஆணையர் ராமஜெயம் உதவி இயக்குனர் ஊராட்சிகள் அருண், வேளாண் செயற்பொறியாளர் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம் ,முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் ரமேஷ், ஸ்ரீநிவாசன் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.